4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே மாதிரி தேர்வு ஆசிரியர்கள் எதிர்ப்பு
சிவகங்கை: தமிழக முழுவதும் 4,5ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு போன்று ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கி தேர்வு நடத்துவது மாணவர்களின் உளவியலுக்கு எதிரான செயல் என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது:மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் மூலம் தேர்வு நடத்துவதால் மாணவர்களிடம் தேர்வு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. தேர்வு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இயலாத குழந்தைப் பருவத்தில் இம்மாதிரியான தேர்வு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வாரம் ஒரு முறை ஆன்லைன் தேர்வு, அதை தொடர்ந்து ஒரே மாதிரியான பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையாகவே கருத வேண்டியுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருப்பதால் தவறில்லை. ஆனால் மதிப்பீடு என்பது பள்ளி அமைவிடம், மாணவர்களின் இருப்பிடச் சூழல், குடும்ப சூழ்நிலை, கற்றல் நிலைக்கேற்ப வேறுபடும். அதை அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களால் மட்டுமே அறியமுடியும்.இளம் வயதிலேயே தேர்வு பயத்தை ஏற்படுத்தாமல் பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற உரிய திட்டங்களை வகுக்க வேண்டும், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!