கல்லூரி விடுதிகளுக்கு பூட்டு மாணவர்கள் தரையில் படுத்து போராட்டம்
மூணாறு: இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் தங்கும் விடுதிகள் பூட்டப்பட்டதால் மாணவர்கள் கல்லூரிக்குள் தரையில் படுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இடுக்கி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 60 பேர் இரண்டு தங்கும் விடுதிகளில் தங்கி படித்தனர். இடுக்கி அணை கட்டியபோது பயன்படுத்திய கட்டடங்களை சீரமைத்து விடுதிகளாக மாற்றினர். தற்போது அவை பொதுப்பணி துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில் விடுதி கட்டடங்கள் தகுதியற்றவை என கூறி கலெக்டர் ஷீபாஜார்ஜின் உத்தரவுபடி அவை பூட்டப்பட்டன.அதனால் மாணவர்களின் கட்டில் உள்பட பொருட்கள் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு மாற்றினர். கல்லூரி தங்கும் விடுதிகளில் மாதம்தோறும் கட்டணம் ரூ.310 செலுத்தப்பட்ட நிலையில் தனியார் தங்கும் விடுதியில் கட்டணம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை செலுத்த வேண்டியது வரும். அதனால் கல்லூரி சார்பில் விடுதி வசதி செய்து கொடுக்குமாறு வலியுறுத்தி இந்திய மாணவர் அமைப்பு சார்பில் கல்லூரிக்குள் மாணவர்கள் தரையில் படுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே தங்கும் விடுதி செயல்பட்ட கட்டடத்தின் அருகில் உள்ள வேறொரு கட்டடத்தை சீரமைத்து தருவதாக கல்லூரி நிர்வாகம் கூறியதை மாணவர்கள் பொருட்படுத்தவில்லை. விடுதிக்கு நிரந்தர கட்டடம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!