ராமச்சந்திரா பல்கலை தின விழா மூத்த ஊழியர்கள் கவுரவிப்பு
போரூர்: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பல்கலை தின விழா, மருத்துவமனை வளாகத்திலுள்ள அரங்கில் நேற்று நடந்தது.இதில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நெடுநாள் பணியாற்றிய ஊழியர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பாக தேர்ச்சி பெற்ற, 35 மாணவர்களுக்கு, தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. எம்.பி.பி.எஸ்., படிப்பில் சிறப்பாக தேறிய சஞ்சனா என்ற மாணவிக்கு, 5 தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், நெடுநாள் பணியாற்றிய, 262 ஊழியர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன.மேலும், தலைமை ஆலோசகர் சோமசுந்தரம் மற்றும் பதிவாளர் ரூபா நாகராஜன் ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும்; சிறார் மருத்துவ துறை பேராசிரியர் ராமசந்திரன் மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேந்திரன் ஆகியோருக்கு மாணவர் வழிகாட்டி விருதுகளும் வழங்கப்பட்டன. நரம்பியல் அறுவை சிகிச்சை துறை தலைவர் கணேஷ் மற்றும் நிர்வாக துணை பொது மேலாளர் ஜெயராமன் ஆகியோருக்கு, சிறப்பான சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில், ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த ஸ்ரீசிட்டியில், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மருத்துவமனை அமைக்கவும், சென்னையிலுள்ள ஜப்பானிய மொழி படிக்கும் தமிழ்நாடு மையத்துடன் இணைந்து, பல்கலை மாணவர்களுக்கு ஜப்பான் மொழி படிப்பு வழங்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.ராமச்சந்திரா மருத்துவமனை வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன் ஆகியோர், நிகழ்வில் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!