மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மானியம் விடுவிப்பு
உடுமலை: தொடர் செலவினத்திற்காக, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப்பள்ளிகளுக்கு, மானியம் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக, நடப்பு கல்வியாண்டிற்கு, -அரசுப்பள்ளி மானியத்தொகை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியம் விடுவிக்கப்படுகிறது.அதன்படி, பள்ளிக்கு வழங்கப்படும் மானியத்தொகையில், 10 சதவீதம் பள்ளி வகுப்பறை மற்றும் வளாகத்துாய்மை, சுகாதாரமாக பராமரித்தல், கை கழுவும் வசதி ஏற்படுத்தல், துாய்மையான குடிநீர்,மாணவர்களிடையே விழிப்புணர்வு மற்றும் நடத்தை மாற்றம், திறன் மேம்பாட்டிற்கும், குறிப்பாக கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள உபகரணங்களை மாற்றவும், பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான மின் கட்டணம், இணையம், ஆய்வக உபகரணம், குடிநீர், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரித்தல் போன்றவற்றிற்கு இந்நிதியினை பயன்படுத்தலாம்.தவிர, அரப்பள்ளி கட்டடங்களின் கட்டமைப்பு வசதியான சுற்றுச்சுவர், வகுப்பறை, கழிவறை, குடிநீர் ஆகியவற்றை சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும் மற்றும் துாய்மை இந்தியா திட்டத்தினை ஊக்குவித்திடவும் நிதியினை உபயோகிக்கலாம்.அதன்படி, 1 - 30 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு, 10 ஆயிரம் ரூபாய்; 31 - 100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய்; 101 - முதல் 250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய்; 251 - 1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு, 75 ஆயிரம் ரூபாய்; ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் மானியத்தொகை வழங்கப்படும்.இந்த நிதி, பள்ளி மேலாண்மை குழு வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!