Load Image
Advertisement

போதை பொருள் விற்பனை: கடைகளில் ஆசிரியர்கள் ஆய்வு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பள்ளிக்கூடம் அருகில் போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.பள்ளிக்கூட மாணவ, மாணவியர் சிலர், தற்போது போதை பொருளுக்கு அடிமையாகி வரும் கலாசாரம், வேகமாக பரவி வருகிறது. இது குறித்து ஆய்வு நடத்திய பள்ளி கல்வித்துறை, தலைமை ஆசிரியர்கள் இது குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிட்டது. அதில், மாணவர்களிடையே போதை தரக்கூடிய பொருட்களின் பயன்பாடு உள்ளதா என, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.பள்ளிக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என, தகவல் தெரிந்தால், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடனடியாக அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் தெரிவிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தல் அவசியம். பள்ளிக்கூடத்தில் மருத்துவ முகாம் நடத்தும்போது, மாணவர்களின் பற்களை பரிசோதனை செய்து, போதைப்பொருள் பயன்படுத்தியதால் ஏற்படும் கறைகள் பற்களில் உள்ளதா என, அறிந்து, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும்.அவர்களுக்கு போதை பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என அறிந்து, அதை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிகளில் போட்டிகள், விழிப்புணர்வு பேரணிகள் வாயிலாக, போதை பொருள் தடுப்பு குறித்து மாணவ, மாணவியருக்கு தெரியப்படுத்த வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அந்தந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று போதை பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வில் ஈடுபட்டனர்.இந்த ஆய்வு பணி தொடர்ந்து நடக்கும் எனவும், போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால், உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்படும் என, ஆய்வில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement