நாடு முழுதும், அரசு, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., டிப்ளமா மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பான எம்.டி.எஸ்., படிப்புகளுக்கான இடங்கள், நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லுாரிகளின் மொத்த இடங்களில், 50 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு, மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின், மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி நடத்துகிறது.இந்தாண்டுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை, https://mcc.nic.in என்ற இணையதளத்தில் நடத்தி வருகிறது. இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ள நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள், அதிகளவில் காலியாக உள்ளன.இதனால், நீட் தேர்வு எழுதிய அனைவரையும் பங்கேற்க செய்து, அந்த இடங்களை நிரப்புவதற்காக, நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது. மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் ஆன்லைனில் பதிவு செய்து பங்கேற்கலாம்; ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!