எழுத்து காலமெல்லாம் நிலைத்து நிற்க அனுபவங்கள் கலந்து எழுத வேண்டும்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி இலக்கிய வட்ட சந்திப்பின், 111வது நிகழ்வு நடந்தது.இதில், நுால் வெளியீடு, படித்ததில் பிடித்தது, அனுபவ பகிர்வு, கவியரங்கம், படைப்பு அனுபவ உரை, நுால் அறிமுகம் ஆகியவை நடைபெற்றன.அமைப்பின் தலைவர் அம்சபிரியா தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். கவிஞர் சோலை மாயவன் வரவேற்றார். நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை அமைப்பாளர் செந்தில்குமார் செய்திருந்தார். கவிஞர் பிரியா எழுதிய, அனாலிக்கா கவிதை நுாலினை, எழுத்தாளர் முருகவேல் வெளியிட, நுாலாசிரியரின் தாயார் தமயந்தி பெற்றுக் கொண்டார். நுாலினை எழுத்தாளர் கலைக்கோவன் அறிமுகப்படுத்தி பேசினார்.கவியரசு எழுதிய, மாய சந்நதம் கவிதைகள் குறித்த கட்டுரை நுாலினை இலக்கிய வட்ட தலைவர் அறிமுகப்படுத்தினார். கவிஞர்கள் பிரியா, கவியரசு ஆகியோர் ஏற்புரை வழங்கினர். எழுத்தாளர் முருகவேல், படைப்பு அனுபவ உரை பகிர்ந்து பேசுகையில், எழுத வரும் இளம் படைப்பாளர்கள் தங்களது அனுபவங்களை உண்மைத் தன்மையோடும், இடை விடாமலும் எழுத வேண்டும்.முன்னோடி படைப்புகளை வாசிக்க வேண்டும். சிலப்பதிகாரம் உட்பட முந்தைய கால எழுத்து, காலமெல்லாம் நிலைத்து நிற்க காரணமாக இருப்பது எது என்று உணர்ந்து தங்கள் படைப்புகளை அனுபவங்கள் கலந்து எழுத வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்று கவிதைகளை வாசித்த கவிஞர்களுக்கு எழுத்தாளர் நாச்சிமுத்து பரிசுகளை வழங்கினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!