சர்வர் குளறுபடியால் காலாண்டு தேர்வு இழுபறி!
கோவை: சர்வர் குளறுபடியால் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் காலாண்டு தேர்வு எப்போது நடத்துவது என தெரியாமல் ஆசிரியர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் சிலபஸ் அடிப்படையில், பாடங்கள் கையாளப்படுகின்றன. இதில், தேர்வு நடைமுறைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவருக்கும், வெவ்வேறு வகை வினாக்கள் அளித்து, அவர்களின் கற்றல் திறன் பரிசோதிக்கப்படுகிறது.இம்மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு, கடந்த 15ம் தேதி துவங்கியது. தேர்வு நடத்துவதற்கான செயலி (TNSED APP), சர்வர் குளறுபடியால் முடங்கியது. இதனால், முதல்நாளன்றே தேர்வு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்பட்டனர்.இதை, தேர்வுக்கான செயலியில் ஆசிரியர்கள் பதிவிட்டதை தொடர்ந்து, மதியம் 3:00 மணிக்கு மேல், இயக்குனரகத்தில் இருந்து தேர்வு நடத்த வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு கண்டபின், இச்செயலியில் தேர்வு நடத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்ட செயலாளர் அரசு கூறியதாவது:எழுத்துத்தேர்வு நடைமுறையே இல்லாததால், தொடக்க வகுப்பு மாணவர்களுக்கு, எழுத்துப்பயிற்சி குறைந்து கொண்டே வருகிறது. வாரந்தோறும் ஆன்லைனில் தேர்வு நடத்துகிறோம். பருவத் தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்துவதால், ஆசிரியர்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், ஒரே மொபைல் போன் வைத்து கொண்டு, மாணவர்களை தேர்வெழுத வைப்பதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை எடுத்துக் கூறினாலும், கல்வித்துறை செவிசாய்ப்பதில்லை.கற்றல் இடைவெளியை மேலும் அதிகரிக்கும் வகையில், கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளன. வரும் 19ம் தேதியும் தேர்வு துவங்குமா என தெரியவில்லை. இதுபோன்ற மெத்தன செயல்பாடுகள், மாணவர்கள் மத்தியில் தேர்வுக்கு தயாராக வேண்டுமென்ற ஆர்வத்தை குறைத்துவிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
வாசகர் கருத்து (1)
எதைப்பற்றியும் யோசிக்காமல், கவலைப்படாமல் பொறுப்பே இல்லாமல் 2000 ரூபாய்க்கு தங்களது ஓட்டை விற்றால் இப்படித்தான் நடக்கும்.