மாணவர் மனதில் பசுமை விதைத்த வனத்துக்குள் திருப்பூர்
திருப்பூர்: இளம் தலைமுறை யினர் மத்தியிலும் பசுமை ஆர்வத்தை பெருக்கியுள்ளது வனத்துக்குள் திருப்பூர் திட்டம். அதன்படி, சீருடையுடன் வந்து, மாணவர்கள் மரக்கன்று நட்டுள்ளனர்.வனத்துக்குள் திருப்பூர் திட்டம் என்பது, திருப்பூர் மாவட்டத்துக்கு பசுமை அங்கீகாரத்தை உருவாக்கிய திட்டம் என்றால் மிகையாகாது. வானம் பார்த்து கிடந்த நிலங்களில், இன்று குறுங்காடுகளை உருவாக்கி, பல்லுயிர் சுழற்சி மண்டலங்களாக மாற்றியுள்ளனர்.மரம் வளர்ந்த இடங்களில், செடிகள் வளர்ந்த; பூச்சி, புழுக்களும், பறவையினங்களின் வாழ்விடமாக மாறியது. பட்டாம் பூச்சிகள் சிறடிக்க, ஏராளமான பூச்சி, வண்டுகள் ரீங்காரமிட, குயிலின் ஆனந்த குரலிசையுடன், இன்று ரம்மியமான சோலைகளை போல் குறுங்காடுகள் மாறியுள்ளன.இவ்வாறு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், இயற்கைக்கு அரணாக நிற்கும், குறுங்காடுகளை காணலாம். வனத்துக்குள் திருப்பூர் -9 திட்டமும், அதே வேகத்தில் பகல் இரவாக சுழன்று கொண்டிருக்கிறது.மொத்தத்தில், பள்ளி மாணவர் மத்தியிலும் பசுமை வளர்ப்பு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்களும், தங்கள் வீட்டு விழாக்களை, மரக்கன்று நடவுடன் நடத்துவதை பாரம்பரியமாக மாற்றிக்கொண்டதே அதற்கு சாட்சி!அவ்வகையில், வெள்ள கோவில், மூலனுார் அடுத்துள்ள மேட்டுவலசு கிராமத்தில், கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான, கோணக்காட்டு தோட்டத்தில், நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சீருடையுடன் வந்து மரக்கன்று நட்டது, பலராலும் பாராட்டப்பட்டது.தேக்கு - 500, மகோகனி - 100, நெல்லி - 10, எலுமிச்சை - 5, செம்மரம் - 5 இலுப்பை - 5, புளி - 5, கொய்யா - 5, மா - 4, பலா - 2, சப்போட்டா - 2 என, 643 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இத்திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க விரும்பும் விவசாயிகள், 90470 86666 என்ற எண்களில், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவை அணுகலாம் என, அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!