முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை ஒத்திவைப்பு ஏன்?
சென்னை: கொரோனாவால் இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களின் பயிற்சி முடிய தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஜூலை மாதத்திற்கு பின், முதுநிலை கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.
நாடு முழுதும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலை, மத்திய கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் , 42 ஆயிரத்து 500 எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமா படிப்புகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும், 4,200 இடங்கள் உள்ளன.
இந்த இடங்கள், நீட் தகுதி தேர்வு வாயிலாக நிரப்பப்பட்டு வருகின்றன. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு இந்தாண்டு நீட் தேர்வு, மூன்று மாதங்களுக்கு முன் நடந்தது.
இதில், தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் என, 2.09 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆகியும், அகில இந்திய கவுன்சிலிங் துவங்கப் படாமல் உள்ளது.
இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா தொற்று காரணமாக எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களின் பயிற்சி ஜூலை மாதம் தான் நிறைவடைகிறது. அவர்களும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கவுன்சிலிங்கில் அவர்களும் பங்கேற்க வேண்டும் என்பதால், முதுநிலை மருத்துவ கவுன்சிலிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு பயிற்சி காலம் முடிந்த பின், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!