பள்ளிகள் சீரமைப்பு, மாலை நேர வகுப்புகளின் போது, மாணவர்களுக்கு இலவசமாக சுண்டல் பயறு வகைகள் வழங்க, 1 கோடி ரூபாய், மாநகராட்சி பள்ளிகளில் இருந்து தேசிய கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் முழு கல்விச் செலவு ஏற்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
சென்னை மாநகராட்சியின் 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், மேயர் பிரியா தலைமையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 83 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டுஉள்ளார்.
அவற்றின் விபரம்:
மாநகராட்சி பள்ளி கட்டடங்களை சீரமைப்பதற்கு மற்றும் புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 139 பள்ளிகளை சீரமைப்பதற்கும், 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
மாநகராட்சி பள்ளிகளில் மாலை வகுப்புகளின் போது, சுண்டல் பயிறு வகைகள் வழங்க, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
மாநகராட்சி பள்ளிகளில் படித்து, தேசிய கல்வி நிறுவனங்களில் சேருவோர்க்கு, முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி ஏற்கும்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு, 1,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்
பள்ளிகளில் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட ஒவ்வொரு தளத்திலும், பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்ஸ் திட்டம், 35 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்
மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து மண்டலங்களிலும், 30 லட்சம் ரூபாய் செலவில் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுவர்
செய்முறை வகுப்பை மேம்படுத்த, 10 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்
நமக்கு நாமே திட்டத்தின் வாயிலாக பொதுமக்களின் பங்களிப்புடன், ஒவ்வொரு பள்ளியிலும் 2 லட்சம் ரூபாய் மதிப்பில், ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்தும் பள்ளி ஆசிரியர்களை, ஐ.ஐ.டி., மெட்ராஸ், ஐ.ஐ.எம்., பெங்களூரு, டில்லி பல்கலைகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது
பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும், 10 நிமிடம் மகிழ்ச்சியான வகுப்புகள் நடத்தப்படும்
சென்னை மாநகராட்சி பள்ளிக்கான லோகோ எனப்படும் லட்சினை அமைக்கப்படும். 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பச்சை, மஞ்சள், ஊதா, அரக்கு ஆகிய வண்ணங்களில், 28 ஆயிரத்து 200 மாணவர்களுக்கு, 85 லட்சம் மதிப்பில் டி-சர்ட் வழங்கப்படும்
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு, நான் முதல்வன் திட்டத்திலும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இணையதளத்தில் புகழ்பெற்ற ஆசிரியர்கள் வாயிலாகவும், கற்றல் பயிற்சி அளிக்கப்படும்
அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், 6.26 கோடி ரூபாய் மதிப்பில், மாதிரி பள்ளி கட்டடம் கட்டும் பணி நடைபெற உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!