பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
பிளஸ் 2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்காதது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்தாண்டு 40 ஆயிரம் மாணவர்களும் பங்கேற்கவில்லை என்றார்.
தொடர்ந்து அமைச்சர் மகேஷ் அளித்த பதில்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டும் எனது வேலையல்ல. இந்த மாணவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. கோவிட் காலத்திற்கு பிறகு, பள்ளிகல்வித்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஒரு வித மாற்றம் ஏற்பட்டு வருகிறது. எதையும் புரிந்து கொண்டு பத்திரிகை தலைப்பு செய்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது. விழிகளை பிடுங்குவது போன்று தலைப்பு செய்தி கூடாது.
2020 -21 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவு தேர்வு செய்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் தான் தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். 2021 - 22 கல்வியாண்டில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த 8, 85,051 பேரில் 41,366 பேர் வரவில்லை. 83,811 பேர் தேர்ச்சி பெறவில்லை. 7,59, 874 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்வுக்கு வராதவர்கள், தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 1,25,171
கோவிட்டிற்கு முன்பு தேர்வு எழுதாத மாணவர்களின் சராசரி 50 ஆயிரமாக இருந்தது. பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடை நின்ற 1,90,000 பேரில் 78 ஆயிரம் மாணவர்களை தேர்வு எழுத வைத்துள்ளோம்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வராத 1,25, 171 மாணவர்களும் இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இந்த கல்வியாண்டு, 8,36,593 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். நீண்ட காலம் பள்ளிக்கு வராதவர்களை கண்டறிந்து வரவழைத்தோம்.
இவர்களில் மொழிப்பாடத்திற்கு 47,943 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை
அதில் அரசு பள்ளி மாணவர்கள் 38,015 பேர்
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 8,848 பேர்
தனியார் பள்ளி மாணவர்கள் 1,080 பேர் வரவில்லை.
தேர்வு எழுதாத 47,943 பேரில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் வராதவர்கள் 40,509 பேர் அடங்குவார்கள்.
தற்போதைய தேர்வில் பங்கேற்காத மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வருகை பதிவேட்டை கணக்கில் கொள்ளாமல் அனைவரும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடை நின்ற மாணவர்கள் மீது அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது.
தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை தேர்வு எழுத வைக்க பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். துணைத்தேர்வின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு வழிமுறை வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
வாசகர் கருத்து (1)
11ம் வகுப்பு பொதுத்தேர்விலும் 11ம் வகுப்பு துணைத்தேர்விலும் தேர்ச்சியடையாதவர்களை எப்படி 12ம்வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பபட்டது. ஏற்கனவே 10ம் வகுப்பில் தேர்வு எழுதாமலேயே பாஸ். 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி. மீண்டும் 11ம் வகுப்பு துணைத்தேர்விலும் தோல்வி. அவனை வீட்டிற்கு அனுப்பியிருக்கவேண்டாமா. இடைநிற்றலை தடுக்கவேண்டும் என்பதற்காக அவனை 12 ம் வகுப்பு தேர்வு எழுதச்சொன்னால் அவன் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என்று தேர்வுக்கு வராமலிருந்துவிட்டான். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கு ஒன்றுமே இல்லை. இன்னும் சில மாணவர்கள் முதல்நாள் 12ம் வகுப்புத்தேர்வு எழுதுகிறார்கள். அடுத்தநாள் அவர்களே 11 ம் வகுப்புத்தேர்வு எழுதுகிறார்கள். கல்லூரியில் தான் இப்படி நடக்கும். தற்போது தேர்வுக்குவராத மாணவர்களை விட்டவிட்டு மீதமுள்ளமாணவர்களுக்கு ஒழுங்காக தேர்வுகளை நடத்துங்கள். மீண்டும் ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்யவேண்டாம்.