அனைத்து பல்கலைகளிலும் ஒரே மாதிரி நிர்வாகம்
சென்னை: பல்கலைகளுக்கு இடையே வேறுபாடு இல்லாமல், அனைத்து பல்கலைகளிலும், ஒரே மாதிரியான நிர்வாகம், ஊதியம், தேர்வு கட்டணம் ஏற்படுத்த குழு அமைக்கப்பட உள்ளது, என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் அனைத்து பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் பொன்முடி தலைமை வகித்தார்.
கூட்டம் முடிந்த பின் அவர் அளித்த பேட்டி:
ஒவ்வொரு பல்கலையிலும், ஒவ்வொரு நிர்வாக முறை உள்ளதை மாற்றி, அனைத்து பல்கலைகளிலும் ஒரே நிர்வாக முறையை ஏற்படுத்த, கூட்டத்தில் முடிவானது.
இதன்படி, ஒரே மாதிரி ஊதியம்; ஒரே மாதிரி தேர்வு கட்டணம்; ஒரே மாதிரி நிர்வாகம் உருவாக்கப்படும். இதற்காக குழு அமைக்கப்பட உள்ளது. குழுவின் பரிந்துரை அடிப்படையில், இரண்டு மாதங்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும்.
தேர்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளதை கண்டித்து, பாரதிதாசன் பல்கலை மாணவர்கள், ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.
இனிமேல் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை, குழு பரிந்துரை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கல்லுாரிகளில், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு, ஒரே மாதிரி சம்பளம் வழங்கப்படுகிறது.
அதேபோல், அனைத்து பல்கலைகளிலும், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, ஒரே மாதிரியான தகுதி, ஒரே மாதிரியான ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இனி எந்தப் பல்கலையிலும், எந்த கூட்டம் நடப்பதாக இருந்தாலும், உயர்கல்வித் துறை செயலர் அனுமதி பெற வேண்டும்.
கொரோனா காலத்தில் தேர்வு நடத்தாமல், அனைத்து மாணவர்களும், ஆல் பாஸ் செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் நின்றுள்ளனர். அவர்களையும் தேர்வு எழுத வைக்க, பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கவர்னர், ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதாவை நிறுத்தி வைத்துள்ளார். துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கும் சட்ட மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை.
அவர் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். எனினும், அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறோம். இவ்வாறு, பொன்முடி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!