சர்வதேச இன்ஜி., பொருட்கள் கண்காட்சி துவக்கம்
சென்னை: இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், மூன்று நாள் சர்வதேச இன்ஜினியரிங் பொருட்கள் கண்காட்சி, சென்னை வர்த்தக மையத்தில் துவங்கியது.
கண்காட்சியை துவக்கி வைத்து, தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:
தமிழகத்தில் இருந்து, 60 நிறுவனங்கள் உட்பட, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 340 சர்வதேச பொறியியல் நிறுவனங்கள், இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. இதில், 60 நாடுகளைச் சேர்ந்த, 300 பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். கண்காட்சி நடத்த, தமிழக அரசு, 1 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மூன்றில் ஒரு பங்கை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. ஏற்றுமதியாகும் உற்பத்தி பொருட்களில், 45 சதவீதம், சிறு, குறு நிறுவனங்களைச் சார்ந்தவை.
கடந்த 2022ல், தமிழகத்தில் இருந்து, 1.33 லட்சம் கோடி ரூபாய் உட்பட, நாடு முழுதும், 9.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இன்ஜினியரிங் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தையும், ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தையும் தமிழகம் வகிக்கிறது.
மாவட்டம் மற்றும் கிராமப்புறங்களில் தயாராகும் பொருட்களை ஏற்றுமதி செய்ய, 100 கோடி ரூபாயில், 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கோவை, திருச்சி, ஓசூர், மதுரை ஆகிய நான்கு நகரங்களில், வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்க, 16.69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பித்த நிறுவனங்களின், 12 ஆயிரம் விண்ணப்பங்களில், 11 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அதிக சிறு, குறு நிறுவனங்கள் இருக்கும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூடுதல் செயலர் சத்யா சீனிவாஸ், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் அருண்ராய், இ.இ.பி.சி., தலைவர் அருண்குமார் கரோடியா உட்பட, பலர்பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!