அரசு மகளிர் கல்லூரியில் 3,000 மாணவியருக்கு, 10 பேராசிரியர்கள்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில், 3,000 மாணவியர் படிக்கும் நிலையில், 10 பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் கடந்த, 1992, அ.தி.மு.க., ஆட்சியில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரி, 300 மாணவியருடன் தொடங்கப்பட்டது. தற்போது இங்கு, 3,000 மாணவியர் படிக்கின்றனர்.
இக்கல்லுாரியில், பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., உள்ளிட்ட துறைகளில், 12 இளங்கலை பட்டப்படிப்பும், எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி., உள்ளிட்ட துறைகளில், 6 முதுகலை பட்டப்பிடிப்பும் உள்ளன.
இது தவிர தமிழ், கணிதம், வேதியியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு உயர் ஆய்வு மையங்களும் உள்ளன. இதில் பயிலும் மாணவியரில், 70 சதவீதம் பேர் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரை சேர்ந்தவர்கள்.
கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கல்லுாரியில் பயிலும் மாணவியருக்கு ஏற்றாற்போல், பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இக்கல்லுாரியில் மொத்தம், 10 நிரந்தர பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதில் தமிழ், இயற்பியல் துறை தலைவர்களுக்கான பேராசிரியர்கள் இல்லை. பி.காம்.,- பி.காம்., கூட்டுரு செயலாண்மை, பொருளியல் துறை, வரலாற்று துறை, புள்ளியியல் துறை உள்ளிட்ட பிரிவுகளுக்கும் நிரந்தர பேராசிரியர்கள் இல்லை.
அதே போல், நான்கு துறைகளுக்கு மேல், உயர் ஆய்வு படிப்பிற்கான ஆய்வு மையம் இருந்தும் நெறியாளர்கள் இல்லை.
78 கவுரவ விரிவுரையாளர்கள்
கடந்த, 10 ஆண்டுகளாக மாணவியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும், பேராசிரியர்கள் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை. இக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், கவுரவ விரிவுரையாளர்களை வைத்து, கல்லுாரி நிர்வாகமும் மாணவியரை கரை சேர்த்து வருகிறது. தற்போது, 78 கவுரவ விரிவுரையாளர்களை கொண்டு, கல்லுாரி இயங்கினாலும், உயர் ஆய்வு படிப்பிற்கான நெறியாளர்கள் இல்லை, டைப்பிஸ்டுகள் இல்லை.
கவனிக்குமா அரசு
உயர்கல்வி துறை மூலம் பல்வேறு கல்லுாரிகளுக்கு ஆய்வகங்கள், கழிவறை, கூடுதல் கட்டடங்களை கட்ட அரசாணை பிறப்பித்து, அதற்கான பூமிபூஜையும் நடந்தது. இந்நிலையில் மாணவ, மாணவியருக்கு எதிர்காலத்தை போதிக்கும் வகையில், போதுமான பேராசிரியர்கள், நெறியாளர்களை அரசு நியமிக்கவில்லை.
பிளஸ் 2 தேர்வில், கல்வித்துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சரிவர கண்காணிக்காததால், 50 ஆயிரம் மாணவர்கள், &'ஆப்சென்ட்&' ஆனதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பல்வேறு கல்லுாரிகளில் முறையான பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும், இதுகுறித்து கல்லுாரிகளின் கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!