பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மன் கி பாத் எனப்படும் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்த ஆண்டின் முதல் நிகழ்ச்சி மற்றும் ௯௭வது மன் கி பாத் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
அடுத்து வரும், தசாப்தம் எனப்படும் 10 ஆண்டுகளை தொழில்நுட்ப ஆண்டாக மாற்ற வேண்டும் என்பது நம் நாட்டின் கனவாகும். இதற்கு புதுமை கண்டுபிடிப்பாளர்கள் தொடர்ந்து வலுசேர்த்து வருகின்றனர். புதுமை கண்டுபிடிப்புக்கான காப்புரிமை கோரி பதிவு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நம் நாட்டில் வெளிநாட்டு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை கோருவதைவிட உள்நாட்டு கண்டுபிடிப்புக்கான பதிவு கள் அதிகமாக உள்ளன. சர்வதேச அளவில் காப்புரிமை கேட்டு பதிவு செய்வதில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது.
அதுபோல, டிரேட்மார்க் எனப்படும் வணிக முத்திரை பதிவில் சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டு களில் காப்புரிமை பதிவு, 50 சதவீதம் வளர்ந்துள்ளது. சர்வதேச புதுமை கண்டுபிடிப்புகள் பட்டியலில், 2015ம் ஆண்டில் 80வது இடத்தில் இருந்த நாம் தற்போது, 40வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாக உடைய இந்திய அறிவியல் மையம் சார்பில், 2022ல் மட்டும் 145 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இது புதிய சாதனையாகும். ஐ.நா., வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில், ஆண்டுக்கு 5,௦௦௦ கோடி கிலோ மின்னணு கழிவுகள் உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நொடியில், 800 லேப்டாப்கள் துாக்கி எறியப்படுகின்றன. இந்த மின்னணு கழிவுப் பொருட்களை முறையாக சுழற்சி செய்தால், அதில் இருந்து பல முக்கிய தாதுப் பொருட்களை சேகரிக்க முடியும்.
இதற்கு தேவையான தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நம் நாட்டில் உள்ளன. தற்போதைய நிலையில் மின்னணு கழிவுகளில், 15 - 17 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்தத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளுக்கு அதிக சாத்தியம் உள்ளது.
அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் முக்கியம் என்பதுடன், இயற்கையுடன் இணைந்து வாழ்வதும் மிக மிக முக்கியம். ராம்சர் எனப்படும் சதுப்பு நிலங்கள் பட்டியலில், 2014ம் ஆண்டில், 26ஆக இருந்த சதுப்பு நிலப் பகுதிகள் தற்போது, 75ஆக உயர்ந்துள்ளன.
இது உள்ளூர் மக்களின், இயற்கையை பாதுகாக்கும் ஆர்வத்தால் சாத்தியமானது. இயற்கையுடன் இணைந்து வாழ்வது என்ற நம் பாரம்பரியத்துக்கு கிடைத்துள்ள அங்கீகாரம். இதுபோன்று நம்முடன் வாழும் பல சாதனையாளர்கள் குறித்து பலருக்கு தெரியாமல் உள்ளது. அதுபோன்றவர்களே, இந்தாண்டுக்கான பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது மக்களின் பத்ம விருதாகும். விருது பெறும் ஒவ்வொருவரின் கதைகளை படிக்கும்போது நமக்கு புதிய உத்வேகம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
உத்திரமேரூர் கல்வெட்டு
பிரதமர் தன் உரையில் மேலும் கூறியுள்ளதாவது:
இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள, ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். ஜனநாயகம் என்பது நம் ரத்தத்தில், நாடி நரம்பில் இணைந்துள்ளது. அது நம் கலாசாரம், பாரம்பரியம். இயற்கையாகவே இந்தியா ஒரு ஜனநாயக நாடு.இந்த புத்தகத்தில், உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு விஷயம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர் உத்திரமேரூர். அங்கு, 1100 - 1200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. அந்தக் கல்வெட்டில், கிராம சபை கூட்டங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும், அதற்கு எப்படி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மினி அரசியல் சாசனமாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!