தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான, பபாசி சார்பில், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 46வது சென்னை புத்தக காட்சி இம்மாதம், 6ம் தேதி துவங்கியது. முதல்வர் ஸ்டாலின், புத்தக காட்சியை துவக்கி வைத்தார். இந்த புத்தக்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
இதில், ஆயிரம் அரங்குகள் இடம் பெற்றன. தினமும் காலை, 11:00 முதல் இரவு, 8:30 மணி வரை புத்தக விற்பனை, 10 சதவீத தள்ளுபடியுடன் நடந்தது. பல பதிப்பாளர்கள், சிறுவர்களுக்கான நுால்களை அதிகம் பதிப்பித்து விற்பனைக்கு வைத்திருந்தனர்.
வரலாறு, அறிவியல் தொடர்பான புனைவுகள், அபுனைவுகளும் அதிகம் வெளியாகி, வாசகர்களின் வரவேற்பை பெற்றன. வழக்கம் போல, கல்கி, சாண்டில்யன், அகிலன், கி.ராஜநாராயணன், பாலகுமாரன், புதுமைப்பித்தன் உள்ளிட்டோரின் நுால்கள் அதிகம் அச்சாகி இருந்தன.
அரசின் பாடநுால் கழகம் உள்ளிட்ட தமிழக அரசு பதிப்பகங்களும், நேஷனல் புக் டிரஸ்ட் உள்ளிட்ட மத்திய அரசு பதிப்பகங்களும் போட்டித் தேர்வுகள் எழுதுவோருக்கான நுால்களை விற்றன. சாகித்ய அகாடமி, காலச்சுவடு, என்.சி.பி.எச்., தேசாந்திரி, வம்சி உள்ளிட்ட பதிப்பகங்கள், இலக்கியம் சார்ந்த நுால்களை அதிகம் பதிப்பித்திருந்தன.
திருநங்கையருக்காக ஒதுக்கப்பட்ட அரங்கு, சிலைகளை விற்ற அரங்கு, மாணவர்களுக்கான அறிவியல் கருவிகளை விற்ற அரங்கு, இல்லம் தேடி கல்வி அரங்கு, இயற்கை ஆர்வலர்களுக்கான நுால்களை பதிப்பித்த தும்பி, இயல்வாகை அரங்குகள் கவனம் பெற்றன.
இதுகுறித்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் மயிலவேலன் கூறியதாவது:
இந்த புத்தகக் காட்சிக்கு, தமிழக அரசும், வாசகர்களும் நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். பொங்கல் பண்டிகை முடிந்தும் புத்தகக் காட்சி நடந்ததால், வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த ஆண்டுகளில், கொரோனா தாக்கத்தால் விற்பனை பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு, 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர்; 16 கோடி ரூபாய்க்கு மேல் நுால்கள் விற்பனையாகின. இது, கடந்தாண்டுகளை விட அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (1)
இனி புத்தக கண்காட்சி செல்வதே வேஸ்ட் என்று முடிவு செய்துவிட்டேன். வெறும் திராவிட சித்தாத்தங்கள் மற்றும் சொறியான் அரங்குகளே பாதிக்குமேல் இருந்தன. இனிமேல் நல்ல புத்தகங்கள் வேண்டும் என்றால் இணையத்தில் மட்டுமே படிக்கவேண்டும் போல....