விரைவில் புதிய கல்வி கொள்கை வெளியாகும்
காரைக்குடி: விரைவில் இந்தியாவில் புதிய கல்வி கொள்கை வெளியிடப்படும், என, காரைக்குடி அழகப்பா பல்கலை பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வி, திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
அவர் பேசியதாவது:
தரமான பல்கலைகள் மட்டுமே எதிர்கால தேவையை பூர்த்தி செய்யும். கற்றல், புனித தலத்திற்கு பெயர் பெற்ற இடம் தமிழகம். பிரதமர் மோடி காசியில் நடந்த தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ் மொழி தான் பழமையானது என்றார்.
தமிழக தொல்லியல்துறைக்கு அறிவியல் சான்றுகள் அதிகம் உள்ளன. அன்றைய காலத்தில் அழகப்பா பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., இல்லை. ஆனால் தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. தமிழ் மொழி தொன்மை, பழமை வாய்ந்தது. தமிழ் அரசியலுக்கான மொழி அல்ல.
2020ல் தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. அதில் அதிக புதிய விஷயங்கள் உள்ளன. ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. தமிழக அரசியலில் மொழி அரசியலை பார்க்கிறேன். தமிழ் மொழிக்கு இந்த அரசு முக்கியத்துவம் தருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி, மராட்டி, கன்னடம் போன்றவை தேசிய மொழியாகும்.
இதுவே புதிய கல்வி கொள்கையின் நோக்கம். மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., தேர்வினை தாய்மொழியில் எழுத வாய்ப்பு தந்துள்ளோம். இளைஞர்களை திறன் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும். அதற்காகவே புதிய கல்வி கொள்கையானது தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!