நீட் தேர்வுக்கு தயாராகி வரும் 59 வயது முன்னாள் விஞ்ஞானி
ராஜாஜிநகர்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி ராஜன்பாபு, தன் சிறு வயது கனவை நனவாக்கும் வகையில், 59 வயதில் மருத்துவராக விரும்புகிறார். அடுத்தாண்டு நடக்கும் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறார்.
பெங்களூரு ராஜாஜிநகர் 5வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பாபு, 59. இஸ்ரோ விஞ்ஞானியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், எம்.எஸ்.சி., முடித்தவர். இவரது மகன், மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ்., படிக்கின்றனர்.
தற்போது ராஜன்பாபுவும் மருத்துவராக விரும்புகிறார். அடுத்தாண்டு நடக்க உள்ள நீட் நுழைவு தேர்வுக்காக தன்னை தயார்ப்படுத்தி கொள்கிறார். வறுமை வாட்டி வதைத்த குடும்பத்தில், 1963ல் பிறந்து, பள்ளிக்கு கூட செல்ல முடியாத நிலையில் தவித்தார். தன் நண்பர்கள் பள்ளிக்கு சென்றால், இவரோ நுால் ஆலைக்கு சென்று பணி புரிந்தார்.
தந்தை, தாய், சகோதரி என மொத்த குடும்பமே உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டதால், இவர்களை காப்பாற்றும் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டது. பள்ளிக்கு செல்லாமல், தனியார் முறையில் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
மதிப்பெண் அடிப்படையில், டிப்ளமோ எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு முடித்தார். பின், பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்து, இஸ்ரோவில் இணைந்தார். விருப்ப ஓய்வு பெற்ற பின், சிறு வயதில் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க தயாராகி கொண்டிருக்கிறார்.
இது குறித்து, ராஜன்பாபு கூறியதாவது:
மருத்துவராகி பணம் சம்பாதிப்பது நோக்கம் அல்ல. மருத்துவ துறையில் ஆராய்ச்சி செய்வேன். கொரோனா கால கட்டத்தில் மக்கள் பட்ட கஷ்டத்தை பார்த்தேன். என் தாயும் கொரோனா பாதிப்பால் தான் இறந்தார். நோயாளிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மருத்துவ உலகம் வளர்ச்சி அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதையறிந்த ராஜாஜி நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், ராஜன்பாபுவை, அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!