பயிற்சி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
புதுச்சேரி: ஐந்து நாள் அறிமுக பயிற்சி முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
லாஸ்பேட்டையில் உள்ள மாநில பயிற்சி மையத்தில் கல்வித் துறையில் புதிதாக பணி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிமுகப் பயிற்சி வகுப்பு கடந்த 21ம் தேதி துவங்கியது.
ஐந்து நாட்கள் நடந்த இந்த வகுப்பில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூகவியல் பாடப் பிரிவைச் சேர்ந்த 110 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பொது வகுப்பு மற்றும் பாடப்பிரிவு சம்பந்தமான வகுப்பு என, இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது.
பள்ளியில் ஆசிரியர் சந்திக்கும் அன்றாட சவால்கள், அவற்றை கையாளும் முறைகள், மாணவர்களின் கற்றல் மேம்பாடு, வளர் இளம்பருவ மாணவர்களின் உளவியல், பள்ளியில் செய்யக்கூடிய கல்வி இணைச் செயல்பாடுகள், புதிய தகவல் தொழில் நுட்பங்களை வகுப்பறையில் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பொது வகுப்புகள் நடந்தன.
பாடம் சம்பந்தமான வகுப்புகளில், பத்தாம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்விற்குத் தயார் செய்வது குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில பயிற்சி மைய சிறப்பு பணி அலுவலர் சிவராம் சிறப்புரை ஆற்றினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, தவளக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் கோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நுாலகர் தனிகைமணி, உடற்கல்வி ஆசிரியர் ஜார்ஜ், விரிவுரையாளர்கள் பூர்ணா, முத்துலட்சுமி, விக்டோரியா சாந்தி செய்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!