Load Image
Advertisement

பட்டப்படிப்பில் தமிழ், ஆங்கிலம் கட்டாயம்: உயர்கல்வி அமைச்சர்

பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்து, தமிழ்நாடு உயர்கல்வி மன்ற அலுவலகத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

பின், உயர் கல்வி அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:

மாணவர்கள் வேலை பெறுவோராக மட்டுமின்றி, வேலை தருவோராக மாறும் வகையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பெரிய மாற்றங்கள்

கணிதம், இயற்பியல் பாடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, இந்த பாடப் பிரிவுகளில், கணினி அறிவியல் பாடத்தையும் இணைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ஒவ்வொரு பாடப் பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இதற்கான புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தயாராகி உள்ளது. இந்த வரைவு அறிக்கை, பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவற்றை துணைவேந்தர்கள் ஆய்வு செய்து, கருத்துகளை வழங்குவர்.

அடுத்த ஆண்டில் இருந்து, தமிழக அரசின் கீழ் செயல்படும், அனைத்து பல்கலைகளின் பாடத்திட்டத்திலும் பெரிய மாற்றங்கள் இருக்கும்.

திருத்தம்

பட்டப் படிப்புகளில், நான்கு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ், ஆங்கில பாடம் கட்டாயம் இடம் பெறும். இந்த மொழி பாடத்திட்டம் மட்டும், அனைத்து பல்கலைகளுக்கும் பொதுவானதாக இருக்கும்.

அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பணி நியமனங்களில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, பணி நியமன சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். பல்கலைகளில் ஆராய்ச்சிகளுக்காக, ஏற்கனவே 50 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டு உள்ளது.

அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்ட தலைவர்களின் பெயரில், ஒவ்வொரு பல்கலையிலும் அறக்கட்டளைகள் துவங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறக்கட்டளை சார்பில், சம்பந்தப்பட்ட தலைவர்களின் பெயரில் டிப்ளமா படிப்புகளை, சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகள் சார்பில் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement