Load Image
Advertisement

தற்சார்பு இந்தியா திட்டத்தில் இளைஞர்கள் சேர வேண்டும்: கவர்னர் ரவி

சென்னை: மஹாத்மா காந்தியை போல வேறு தலைவர்கள் உலகில் இல்லை. அவரது கிராம தொழில்கள் பாதுகாப்பு என்ற கொள்கையின் படியான, தற்சார்பு இந்தியா திட்டத்தில், இளைஞர்கள், மாணவர்கள் இணைய வேண்டும், என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை, தமிழக கவர்னர் ரவி, நேற்று துவக்கி வைத்தார்.

விடுதலை
அப்போது, ஆதரவற்ற மாணவர்களுக்கு உடைகளையும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மாநில அளவில் நடந்த கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசுகளையும் வழங்கினார்.
பின், அவர் பேசியதாவது:
காந்தியின் பிறந்த தினத்தில், காதி பொருட்களுக்கான தள்ளுபடி விற்பனையை துவக்கி வைப்பதில் பெருமை அடைகிறேன். காரணம், காந்தியை போல உயரிய எண்ணங்களும், தொலைநோக்கு பார்வையும், மனிதாபிமானமும் உள்ள தலைவர்கள், உலகில் வேறு யாரும் இல்லை.
வேற்றுமைகள் நிறைந்த இந்தியாவில், மிகவும் பின்தங்கிய, கிராமப்புற, ஏழைகளை முன்னேற்ற வேண்டும் என்பதை லட்சியமாக காந்தியடிகள் கொண்டிருந்தார். அதற்காகத் தான் காதி நிறுவனம் துவக்கப்பட்டது.
பிரிட்டிஷாரின் ஆலைத் தயாரிப்பு உடைகளால், நம் நாட்டின் பருத்தி மற்றும் நுாற்பு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. அந்த தொழிலில் ஈடுபட்டிருந்த ஏழைகளின் வாழ்வை உயர்த்துவதற்காக, சுதேசி இயக்கத்தை துவக்கினார். அனைவரும் உள்நாட்டு தயாரிப்பான கதராடையை அணிய வேண்டும்; அப்போது தான், நம் நாடு பொருளாதார விடுதலை அடைய முடியும் என்றார்.
வேற்றுமைகள் நிறைந்த நம் நாட்டில், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிராமத் தொழில்களை பாதுகாத்தால்தான் அனைவரும் வளர முடியும். ஒவ்வொருவரின் வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி உள்ளது என்றார் காந்தியடிகள். அதன்படி, ஆத்ம நிர்பார் பாரத் எனும் தற்சார்பு பாரதம் என்ற திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தில், மாணவர்கள், இளைஞர்கள் இணையவும், ஆதரவளிக்கவும் வேண்டும்.
ரூ.75 ஆயிரம்
ஏற்கனவே கொரோனா காலத்தில் நலிவுற்ற காதி ஆடைகளின் விற்பனை, தற்போது உயர்ந்துஉள்ளது.காதி மற்றும் கிராம கைத்தொழில் விற்பனைக்கு, தமிழக அரசும் நல்ல ஒத்துழைப்பை வழங்குகிறது. தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சிகளை உள்வாங்கி, முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடும் நிலையில், காதி வளர்ந்துள்ளது. எல்லாரும், எப்போதும் காந்தியின் சிந்தனைகளை பின்பற்றி காதியை வளர்ப்போம்.இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி, 75 ஆயிரம் ரூபாய்க்கு ஆடைகளை வாங்கினார். அதற்கான ரசீதை, கவர்னர் ரவி அவருக்கு வழங்கினார்.
பின், அமைச்சர் காந்தி பேசியதாவது:
தமிழகத்தில், கைத்தறி மற்றும் துணிநுால் துறை, நுாற்பாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவதோடு, கைத்தறி ஆடைகளை விற்பனை செய்வதிலும் காதி முனைப்புடன் செயல்படுகிறது.
அண்ணாதுரை பிறந்த தினத்தில், மாணவர்களின் வாயிலாக, கைகொடுப்போம் கதருக்கும் கைத்தறிக்கும் என்ற முழக்கத்துடன், 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, அதைவிட அதிகமாக விற்பனை செய்ய உழைப்போம்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், காதி துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஆதரவற்ற மாணவர்கள் பங்கேற்றனர்.

Home வாசகர் கருத்து (1)

  • Samathuvan - chennai,India

    நமது ஒன்றிய ஆட்களில் எவர் கதர் ஆடையை அணிகிறார்கள் என்பதை முதலில் காட்டுங்கள் தெரு ரவி அவர்களே.

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement