Load Image
Advertisement

பல்கலையில் பாடத்திட்டமாகும் மதுரை இளைஞர்களின் ஸ்மார்ட் டிவைஸ்

மதுரை: மதுரை ஷேவ் மாம் நிறுவன இணை நிறுவனர்கள் தினேஷ்பாண்டியன், செந்தில்குமார் உருவாக்கிய கர்ப்பிணிகளுக்கான புதிய டிவைஸ் அனைத்து பல்கலை எம்.பி.ஏ., பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது.
மதுரைக்கார இளைஞர்களின் ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது: மலைக்கிராமத்தில் வாழும் கர்ப்பிணிகளுக்கு சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காது.

தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து மேற்குத்தொடர்ச்சி மலையில் கேரளா முதல் மகாராஷ்டிரா வரையுள்ள மலைவாழ் மக்களிடம் தான் எங்கள் ஆராய்ச்சியை தொடங்கினோம். அவர்களின் இருதய துடிப்பு, ரத்த அழுத்தத்தை கண்டறியும் வகையில் தங்கநிற பிரேஸ்லெட் வடிவில் ஒரு டிவைஸ் உருவாக்கி கையில் அணிவித்தோம்.
அதை கிராம செவிலியர் மூலம் மற்றொரு டிவைஸ் வழியாக கண்காணித்தோம். அதை வீட்டு ஆண்கள் வாங்கி சென்றதால் பாசிமாலை வடிவில் டிவைஸ் செய்து கழுத்தில் அணிவிக்க செய்தோம். ரத்த அழுத்தம், இருதயத் துடிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு உட்பட 10 வகையான பரிசோதனைகள் பதிவானது. இவை அனைத்தையும் கண்காணிக்கும் வகையில் கிராம செவிலியர்களுக்கு சிறிய டிவைஸ் உருவாக்கி தந்தோம்.
வேலை சற்று எளிதானது.ரத்த சோகை, சத்து பற்றாக்குறை தான் தாய், சேய் சந்திக்கும் பிரச்னை. சத்தான உணவுகளை கர்ப்பிணிகளிடம் கொடுத்தால் சாப்பிடாமல் வீட்டில் உள்ளவர்களிடம் தந்தனர். இதனால் மாதந்தோறும் கர்ப்பிணிகளின் எடை கூடவில்லை. தண்ணீரை அடிக்கடி குடிக்கும் பழக்கம் பெண்களுக்கு இருந்தது. அதன் பின் சத்தான பவுடரை கொடுத்தோம். பவுடர் கலந்த தண்ணீரை குடித்த கர்ப்பிணிகளின் எடை ஒவ்வொரு மாதமும் 800 கிராம் முதல் ஒரு கிலோ வரை அதிகரித்தது. குழந்தையின் எடையும் 40 சதவீத அளவுக்கு அதிகரித்தது.
மாவட்ட கலெக்டர்களும் கண்காணிக்கும் வகையில் செயலி உருவாக்கி டிவைஸ் வழங்கினோம். அந்த செயலி மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை கர்ப்பிணிகள் உள்ளனர், தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடந்ததா, பிரசவ கால நிலை குறித்து கலெக்டர்களும் கண்காணிக்க முடிந்தது. நிறைய பெண்களுக்கு எப்போது பிரசவமாகும் என தெரியாது. கடைசிநேரத்தில் வலியுடன் மருத்துவமனை வருவதற்குள் உதிரப்போக்கு அதிகமாகி இறப்பு அதிகமாகும். இதற்காக பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்தே டிவைஸ் மூலம் அலர்ட் கால் அனுப்பினோம்.
குக்கிராமமமாக இருந்தால் 2 நாட்களுக்கு முன்பே மருத்துவமனை செல்ல அறிவுறுத்தினோம். இப்படி மேற்குத் தொடர்ச்சி மலையோர 300 கிராமங்களில் 36 ஆயிரம் கர்ப்பிணிகளை கண்காணித்து பெருமளவில் இறப்பை தவிர்த்துள்ளோம்.குழந்தை பிறந்த பின் இந்த டிவைஸ் குழந்தையை கண்காணிக்கும். தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளதென இரண்டாண்டுகளுக்கு கண்காணிக்கும். கர்ப்ப காலத்தில் இருந்து 1000 நாட்கள் வரை இந்த டிவைஸ் வேலை செய்யும்.
ராமநாதபுரம், தருமபுரி, திருச்சி கிராமப்புறங்களில் டிவைஸ் வழங்கியுள்ளோம். டிவைஸ் அணிந்திருப்பதால் ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவ ஆலோசனை கிடைக்கிறது. யாரோ ஒருவரின் கண்காணிப்பு இருப்பதே கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பாக உள்ளது. எங்களது இந்த ஆய்வுகளை உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து கனடாவைச் சேர்ந்த அறிவியல் இதழான ஐவே (ivey) ல் எங்களது ஆய்வுகளை வெளியிட்டது. இதன் மூலம் உலகத்தில் உள்ள அனைத்து பல்கலைகளின் எம்.பி.ஏ., மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டமாக இந்த ஆய்வு கொண்டு வரப்பட உள்ளது. மதுரையில் சிறிய ஸ்டார்ட் அப்பாக 5 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த பயணம் உலகளவில் பாராட்டை பெற்றுள்ளது என்றனர்.
இவர்களிடம் பேச: 80150 05005.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement