Load Image
Advertisement

ஆசிரியர் பயிற்சிக்கான பள்ளி ஒதுக்கீட்டிற்கு புது நடைமுறை

சென்னை: பி.எட்., - எம்.எட்., மாணவர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பள்ளி ஒதுக்கீட்டு பணிகளை, முதன்மை கல்வி அலுவல கங்களுக்கு பதில், இனி, பள்ளிக் கல்வி கமிஷனரகம் மேற்கொள்ளும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 650க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இரண்டு ஆண்டுகள் நடத்தப்படும் இந்த படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், 80 நாட்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நேரடி களப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இந்த களப் பயிற்சிக்கு, ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே, பள்ளிகளை ஒதுக்குவர். நடைமுறைச் சிக்கலால், பயிற்சி ஆசிரியர்களுக்கு சரியான முறையில், பள்ளிகள் ஒதுக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், பி.எட்., - எம்.எட்., ஆசிரியர் களப் பயிற்சிக்கான பள்ளிகள் ஒதுக்கீட்டில், இனி, முதன்மை கல்வி அலுவலர்கள் தலையிட வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி கமிஷனரகம் அனுப்பும் பட்டியல் அடிப்படையில், மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப, எந்த பள்ளியில், எத்தனை பேருக்கு ஒதுக்கீடு வழங்கலாம் என்பதை, சம்பந்தப்பட்ட கல்வியியல் கல்லுாரிகளே முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு கல்லுாரிகள் தவிர, மற்ற தனியார் பல்கலைகளின் மாணவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்களே இடங்களை ஒதுக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்திலேயே, பயிற்சி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவர்; அவர்களை கற்பித்தல் பணிக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், சி.இ.ஓ.,க்களுக்கு கமிஷனரகம் உத்தரவிட்டுள்ளது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement