Load Image
Advertisement

அண்ணா பல்கலை கல்லூரிகளில் தொழிற்கல்வி மாணவர்களுக்கு சீட் இல்லை!

தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகள் எல்லாம், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. இந்தக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேருவதற்கான, ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங்கை, தமிழக உயர்கல்வி துறை சார்பில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.
கவுன்சிலிங்கின் போது, அண்ணா பல்கலையின் சென்னை வளாக கல்லுாரிகளில், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு எட்டு இடங்களும்; மாற்று திறனாளிகளுக்கு, 5 சதவீத இடங்களும்; விளையாட்டு பிரிவினருக்கு, 12 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.

தொழிற்கல்வி பிரிவினருக்கு இந்தாண்டு இடம் ஒதுக்கப்படும் என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். ஆனால், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. கவுன்சிலிங்கிற்கான நடப்பாண்டிற்கான விதிகளில், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையில் இடங்கள் ஒதுக்கப்படாது என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 100 இடங்கள்; தனியார் கல்லுாரிகளில், 4 சதவீத இடங்கள் மட்டுமே, தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் உள்ள மூன்று கல்லுாரிகள், பல்கலையின் மண்டல மற்றும் உறுப்பு கல்லுாரிகளாக உள்ள, 17 கல்லுாரிகள் என, மொத்தம் 20 கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கப்படாது என்பதால், அரசுப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, மாணவர்களும், பெற்றோரும் கூறியதாவது:
நாடு முழுதும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. தொழிற்கல்வி படிப்பேர் இன்ஜினியரிங்கில் மட்டுமே சேர முடியும் என்ற நிலையில், அவர்களுக்கு, அண்ணா பல்கலையின், 20 கல்லுாரிகளில் இடம் மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பிளஸ் 2 முடிந்து இன்ஜினியரிங் கவுன்சிலிங் வரும் போது, அண்ணா பல்கலை கல்லுாரிகளிலேயே சேர முன்னுரிமை அளிப்பர்.
அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கல்லுாரிகளில், அரசு பள்ளிகளின் தொழிற்கல்வி மாணவர்களுக்கு மட்டும் இடம் இல்லை என்பது விதிமீறிய செயல்.இதை முதல்வர் கவனித்து, தொழிற்கல்வி மாணவர்களும், அண்ணா பல்கலையின், 20 கல்லுாரிகளில் படிக்கலாம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement