சேலம் அரசு மருத்துவ கல்லுாரியில், 27வது இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு விழா நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார்.
இதில், 107 பேருக்கு சான்றிதழ் வழங்கி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
மருத்துவ சேவைக்கு இளங்கலை பட்டப்படிப்பு மட்டும் போதாது. தொடர்ந்து படிக்க வேண்டும். இளங்கலை முடித்த, 107 பேருக்கும், கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய அனுபவம் கிடைத்துள்ளது.
உலக சுகாதார நிறுவன இயக்குனர் சவுமியா ஸ்வாமிநாதன், வைரசுடன் போராடித் தான் வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நாட்டில், 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், 5,000க்கும் அதிகமான, வைரஸ் உருமாறி இருப்பதால், அது மருத்துவர்களுக்கு, சவாலான பணியாகி விட்டது.
இனி, மருத்துவர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டி இருக்கும். இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில், மருத்துவ படிப்பில் ஆண்டுக்கு, 10 ஆயிரத்து, 425 மாணவ, மாணவியர் சேர்க்கை நடக்கிறது.
சேலம், தஞ்சாவூர், திருச்சி, சென்னை கே.எம்.சி., மருத்துவ கல்லுாரிகளில், சீட் எண்ணிக்கையை, 250 ஆக உயர்த்த, கட்டுமான வசதி உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நீட் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., முடித்த, கடைசி பேட்ஜ் மாணவ, மாணவியர்களில் தங்கப்பதக்கம் பெற்ற, 28 பேர், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். கருமுட்டை முறைகேட்டை தடுக்க சென்னை, திருச்சி அரசு மருத்துவ கல்லுாரிகளில், செயற்கை கருவூட்டல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!