10ம் வகுப்பு வரை ஜூன் 13ல் பள்ளிகள் திறப்பு
சென்னை: கோடை விடுமுறை முடிந்து, புதிய கல்வி ஆண்டில் மூன்று கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 13ல் திறக்கப்படுகின்றன. தொடர்ந்து பிளஸ் 1க்கு 27ம் தேதியும்; பிளஸ் 2வுக்கு 20ம் தேதியும் வகுப்புகள் துவங்க உள்ளன.தமிழகத்தில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து, மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை, தமிழக பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்டது. இதன்படி, மூன்று கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20; பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 27ல் பள்ளிகள் திறக்கப்படும். அனைத்து சனிக் கிழமைகளிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை நாள். ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்புக்காக, மாதம்தோறும் தலா ஒரு சனிக்கிழமை வீதம் ஏழு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகளை பொறுத்தவரை காலாண்டு தேர்வுகள் செப்டம்பரில் துவங்க உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 23; ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்., 26லும் காலாண்டு தேர்வு துவங்கி, செப்., 30ல் முடியும். காலாண்டு தேர்வு மற்றும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர், 1ல் துவங்கி 5ல் முடியும்.
அக்., 6ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அக்., 24 தீபாவளி விடுமுறை. இதையடுத்து, டிசம்பரில் அரையாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. டிச., 16ல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வு துவங்கி, டிச.,23ல் முடிகிறதுl டிச., 24 முதல் 2023 ஜன.,1 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை. பின், ஜன.,2ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஜன., 14 முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டு, மீண்டும் ஜன., 18ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மார்ச்சில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 13; பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 14லிலும் பொதுத் தேர்வு துவங்க உள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்., 3ல் துவங்குகிறது. ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் ஏப்., 20ல் துவங்கி ஏப்., 28ல் முடிகின்றன. இதையடுத்து, 2022- - 23ம் கல்வி ஆண்டு முடிந்து, ஏப்.,29 முதல் 2023 மே 31 வரை கோடை விடுமுறை விடப்படுகிறது.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!