பிற மாநிலங்களிலும் தமிழை வளர்க்கவேண்டும்: கவர்னர் ரவி வலியுறுத்தல்
சென்னை: தமிழகம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள பிற மாநிலங்களிலும், அங்குள்ள பல்கலைகளிலும் தமிழை வளர்க்கவும், கற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கவர்னர் ரவி வலியுறுத்தினார்.
சென்னை பல்கலையின், 164வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, கவர்னர் ரவி பேசியதாவது:
சென்னை பல்கலையில், தமிழ் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள்குறித்து, துணைவேந்தர் கவுரி விரிவாக எடுத்து கூறினார். இந்த தொன்மையான, மேம்பட்ட தமிழ் மொழியின் பெருமைகளை, பிரதமரே பல முறை எடுத்து கூறியுள்ளார்.
தமிழ் மொழி இன்னும் எங்கெல்லாம் செல்ல வேண்டுமோ, அதற்கான பணிகளை தமிழக அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளுக்கான கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில், உயர்நீதிமன்றங்களின் வழக்கு நடவடிக்கைகளில், மாநில மொழிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றார்.
தமிழகம் முன்னிலை
இதன் வாயிலாக,சென்னை உயர் நீதிமன்றத்திலும், தமிழ் மொழி வழி செயல்பாடுகளை காண இருக்கிறோம். பனாரஸ் பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்புக்கான இருக்கை அமைக்கப்படும் என, பிரதமர் அறிவித்துள்ளார்.
தமிழ் பேசாத மாநிலங்களில், மூன்றாவது மொழியாக தமிழை கற்று தரலாம் என, மத்திய கல்வித் துறை கூறியிருக்கிறது. மிகவும் தொன்மையான தமிழ் மொழியை, மற்ற மாநிலங்களிலும் வளர்க்க வேண்டும்.
இதன்படி, பிற மாநில மக்களும் தமிழை கற்கும் வகையில், அங்குள்ள பல்கலைகளில் தமிழ் கற்பதற்கான இருக்கைகளை அமைக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் மறந்துவிட்ட, நம் சுதந்திர கதாநாயகர்களை ஞாபகப்படுத்தி கொள்ள வேண்டும்.அனைத்து வளங்களையும் உடைய நம் நாடு, உலகையே வழி நடத்தும் தகுதி பெற்றது.
அதுபோல், கலாசாரத்திலும், பாரம்பரியத்திலும், கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதாரம் அனைத்திலும், தமிழகம் முன்னிலை வகிக்கிறது.நாட்டை வழி நடத்துவதற்கு, தமிழகம் தகுதியான மாநிலமாக உள்ளது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தால், அதற்கு முன்பிருந்த நம் நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன.
வேண்டுகோள்
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் துறை அகழாய்வில், தமிழர்கள், 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை பயன்படுத்தியதாக, முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் மகிழ்ச்சியானது. உலகிலேயே இந்தியாவில் தான் மிகவும் தரம் உயர்ந்த இரும்பு எடுக்கப்பட்டது. கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை பிரிட்டிஷாருக்கே, சென்னை மாகாணம் தான் அறிமுகம் செய்தது.
காலனி ஆதிக்கத்துக்கு முன்பு இருந்த, நம் கல்வியின் நிலை, தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் தொழில் வணிகம் ஆகியவை குறித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு, அவற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
இதுவே, பட்டம் பெறுவோருக்கும், இளைஞர்களுக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள். பட்டம் பெற்ற அனைவரும் நம்பிக்கையுடன் திகழ வேண்டும்.
ஏராளமான வாய்ப்புகள் உங்கள் முன் உள்ளன. உங்கள் முயற்சிகளில் கிடைக்கும் தோல்விதான், உங்களின் வெற்றிக்கு பலமாக அமையும். எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்ற திருக்குறளுக்கு ஏற்ப வெற்றி பெறுவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!