இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவர் வருகை குறைவு
மதுரை: தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களுக்கு வருகை தரும் மாணவர்கள் எண்ணிக்கை திடீரென குறைந்து வருகிறது.
கொரோனா தொற்றில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான கற்பித்தல் பணிக்கு ரூ.200 கோடி மதிப்பில் இத்திட்டம் துவங்கப்பட்டது.ஜன.,6ன் படி மாநிலத்தில் 92,169 மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. பயிற்சி அளிக்க 1,42,710 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாலை 5:00 - 7:00 மணி வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கின்றன. தற்போது கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்கள் மாலையில் செயல்படுகின்றன.
பள்ளிகள் நடக்கும் போது வருகை தந்த மாணவர்கள், விடுமுறையில் மையங்களுக்கு வருவதை தவிர்க்கின்றனர். மையங்களில் தலா 20 மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில் 80 சதவீதம் மையங்களில் சிங்கிள் டிஜிட்டில் மாணவர் வருகை உள்ளது. பல மையங்களில் மாணவர் வருகை அதிகரித்துள்ளதாக பதிவேட்டில் கணக்கு காட்டுகின்றனர். உண்மை நிலவரம் அறிந்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
திட்டம் துவங்கும் போது பள்ளிகளில் மையங்கள் துவங்க கூடாது. ஆசிரியரை ஈடுபடுத்தக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் இருந்தன. ஆனால் மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலும் பள்ளிகளில் தான் மையம் துவங்கப்பட்டு உள்ளது. மாலை 5:00 - 7:00 மணி வரை பள்ளிகளில் சுழற்சி முறையில் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படுகிறது.
தற்போது விடுமுறை என்பதால் மாணவர்கள் வருகை அதிகரிக்க சம்மந்தப்பட்ட பெற்றோரிடம் சென்று பேசி வருகை தர வைக்க தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இத்திட்டத்தின் நோக்கம் மாறுகிறது என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!