Load Image
dinamalar telegram
Advertisement

டியூசன் பணிக்கு திறனறி தேர்வு

சென்னை: அரசு பள்ளிகளில் மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பணிக்கு, சிபாரிசு கடிதம் வாயிலாகவும், மாதம் 1,000 ரூபாய் சம்பளம் பெறும் பணிக்கு, திறனறி தேர்வு வழியாகவும் பணி நியமனம் வழங்குவதால், பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு, பல்வேறு செயலிகள் வழியாக, ஆன்லைன் வகுப்புகளை தினமும் நடத்தின. ஆனால், அரசு பள்ளிகளில் ஆன்லைன் வழி வகுப்புக்கு முயற்சிக்காமல், கல்வி, டிவியில் வீடியோக்களை ஒளிபரப்பினர்.

பெரும்பாலான வீடுகளில், பொழுதுபோக்கு சேனல்களே ஓடியதால், அரசு பள்ளி மாணவர்கள் பாட வீடியோக்களை பார்க்கவில்லை. சில இடங்களில் மாணவர்கள் கல்வி சேனல் பார்ப்பது போன்று புகைப்படம் எடுத்தும், சில புள்ளி விபரங்களை காட்டியும், பள்ளி கல்வி துறையினர் நிலைமையை சமாளித்தனர்.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கற்பித்தல் பின்னடைவை உணர்ந்துள்ள பள்ளி கல்வித்துறை, இல்லம் தேடி கல்வி திட்டத்தை, 200 கோடி ரூபாய் செலவில் துவக்கியது.வீடு தேடி சென்று டியூஷன் எடுக்கும் இந்த திட்டத்தில், இதுவரை பல லட்சம் ரூபாய் செலவில், கலை குழுக்களின் ஒயிலாட்டம், கரகாட்டம் தான் பெரிய அளவில் நடந்து வருகிறது.
மாறாக, பாடங்கள் நடத்தும் இடங்கள் குறைவாகவே உள்ளன. வேடிக்கைடியூஷன் எடுக்கும் தன்னார்வலர்களை நியமிக்கும் பணி ஒரு மாதமாக நடக்கிறது. மாதம் 1,000 ரூபாய் சம்பளத்தில் தன்னார்வலர்கள் பணியாற்ற வேண்டும். இதற்கான ஆன்லைன் பதிவு துவங்கி உள்ளது. இதற்கு, 30க்கும் மேற்பட்ட விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்வதுடன், சான்றிதழ்களையும் காட்ட வேண்டும். திறனறி தேர்வு எழுதவும், சிறப்பு பயிற்சி பெற வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு உள்ளன. அதனால், பலர் ஆர்வம் குறைந்து காணப்படுகின்றனர்.
அதேநேரத்தில், இந்த திட்டத்துக்கு நேர் மாறாக, அரசு பள்ளிகளின் தற்காலிக முதுநிலை ஆசிரியர் பணிக்கு நியமன நடவடிக்கைகள் ஜரூராக நடந்து வருகின்றன. அரசு மேல்நிலை பள்ளிகளில் 2,774 பேர் பிளஸ் 2 பாடம் எடுக்கும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஆன்லைன் பதிவோ, திறனறி தேர்வோ கிடையாது. மாநிலம் தழுவிய நியமனமும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக, அரசியல் கட்சியினர் மற்றும் அதிகார செல்வாக்கு பெற்றவர்களின் சிபாரிசு கடிதங்களுடன், இந்த பணிக்கு பலர் வரிசை கட்டியுள்ளனர். கோரிக்கைஇதனால், நன்றாக படித்து அதிக மதிப்பெண்ணுடன் வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இந்த நியமன முறைகளின் தரத்தை உயர்த்தி, முறைகேடு புகார்கள் எழாமல் பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement