திட்டமிட்டபடி தேர்வு நடக்குமா பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி?
சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான போட்டி தேர்வு, வரும் 8ம் தேதி திட்டமிட்டபடி நடக்குமா என, விண்ணப்பதாரர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வழியே போட்டி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு ஏற்கனவே, 2017ல் நடந்தது. தேர்வில், பலர் முறைகேடாக அதிக மதிப்பெண் பெற்றது தெரியவந்தது.
இதையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 166 பேருக்கு தேர்வு எழுத ஆயுள் தடை விதிக்கப்பட்டது. மறு தேர்வு அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன; 1.39 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்தாண்டு அக்., 28 முதல் 31 வரை கணினி வழியில் தேர்வு நடப்பதாக இருந்தது.
ஆனால், பெரும்பாலானதேர்வர்களுக்கு 400-500 கி.மீ., துாரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதும், தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தேர்வர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் மையங்கள் அமைக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டார். இதையடுத்து, வரும் 8 முதல் 12ம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என, கடந்த 10ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம்முழுதும் வட கிழக்கு பருவ மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல கல்லுாரி மற்றும் பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மின் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வு மையங்களாக சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் செயல்பட முடியுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.மேலும், பல மாவட்டங்களில்,பல தேர்வர்களின் வசிப்பிடங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள்,தேர்வுக்கு திட்டமிட்டபடி தயாராகிவர முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சவால்களை எல்லாம் சந்தித்து, வரும் 8ம் தேதி தேர்வு நடத்தப்படுமா அல்லது தள்ளி வைக்கப்படுமா என்பதை, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்த வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!