dinamalar telegram
Advertisement

தமிழ் இசை கட்டாய பாடம் ராமதாஸ் வலியுறுத்தல்

Share

சென்னை: பள்ளிகளில், தமிழ் இசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும், என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ராமதாஸ் எழுதிய, இசையின் இசை என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நேற்று நடந்தது. நுாலின் முதல் பிரதியை, சீர்காழி சிவசிதம்பரம் வெளியிட, நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பெற்றுக்கொண்டார்.
விழாவில், ராமதாஸ் பேசியதாவது:
தமிழர்களின் வாழ்க்கையுடன் கலந்தது இசை. விவசாயத்தில் நாற்று நடுதல், களை எடுத்தல், ஏற்றம் இறைத்தல் என, அனைத்துக்கும் தனித்தனி பாடல்கள் உண்டு. தமிழ் இசை தான் உலகின் ஆதி இசை. தமிழ் இசையை குழந்தைப் பருவத்தில் இருந்தே படிக்க வேண்டும். அதற்காகவே பள்ளிகளில், தமிழ் இசையைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
தமிழகத்தின் தெருக்களில், தமிழ் இருக்க வேண்டும் என்பது என் ஆசை. காலம் இப்படியே சென்று விடாது. நிச்சயமாக காலம் ஒரு நாள் மாறும். நாம் அதை மாற்ற வேண்டும். தமிழகத்தில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஓமந்துாரார் மருத்துவமனையை மாற்றும் திட்டத்தை கைவிடுங்க!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையை, அங்கிருந்து இடமாற்றம் செய்து விட்டு, அந்த வளாகத்தை மீண்டும் தலைமை செயலகம் மற்றும் சட்டசபை செயலகமாக மாற்ற முயற்சிகள் நடப்பது வருத்தம் அளிக்கிறது.
ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை, புகழ்பெற்ற அரசு மருத்துவ நிறுவனமாக மாறியுள்ள நிலையில், அதை டில்லி எய்ம்ஸ்க்கு இணையாக தரம் உயர்த்த அரசு முயல வேண்டும். எனவே, ஓமந்துாரார் வளாகத்தில், தற்போதுள்ள மருத்துவமனையை அகற்றி விட்டு, அதை சட்டசபை மற்றும் தலைமை செயலக வளாகமாக மாற்றும் திட்டமிருந்தால், அதை கைவிட வேண்டும்.
ஓமந்துாரார் மருத்துவமனை இப்போதிருக்கும் இடத்தில் நீடிக்கும்; அங்கு தலைமை செயலகம் வராது என, அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு புதிய தலைமை செயலகம், சட்டசபை வளாகம் தேவை என்றால், அவற்றை அமைக்க மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement