தமிழ்வழியில் படித்து தேர்வானோர் சான்றுகளை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:தமிழ்வழியில் படித்ததற்கான ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச் சான்றுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனு:
தமிழ் வழியில் படித்தோருக்கு மாநில அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. குரூப்1 தேர்விற்கு டி.என்.பி.எஸ்.சி., ஜனவரி 20 ல் அறிவிப்பு வெளியிட்டது. இதில் தொலைநிலைக் கல்வியில் பட்டம் பெற்று, தமிழ்வழியில் படித்ததற்குரிய (பி.எஸ்.டி.எம்.,) சான்று சமர்ப்பித்தவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுள்ளனர்.
தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. குரூப் 1 தேர்வு அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். பள்ளிக் கல்வி முதல் கல்லுாரி வரை தமிழ்வழியில் பயின்றவர்களை மட்டும், அதற்குரிய ஒதுக்கீட்டில் அனுமதிக்க டி.என்.பி.எஸ்.சி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு சக்திராவ் மனு செய்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வுவிசாரித்தது. டி.என்.பி.எஸ்.சி., தரப்பு, தமிழ் வழியில் படித்ததற்கான ஒதுக்கீட்டில் 2016 முதல் 2019 வரை 85 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் கல்லுாரியில் அல்லது தொலைநிலைக் கல்வியில் பயின்றார்களா விபரம் எங்களிடம் இல்லை. அவர்கள் பணியில் சேர்ந்த அரசுத்துறைகளிடம் இருக்க வாய்ப்புள்ளது, என பதில் மனு தாக்கல் செய்தது.
நீதிபதிகள்: பள்ளிக் கல்வி முதல் பட்டப் படிப்புவரை தமிழ் வழியில் முடித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தும் வகையில் அரசு மார்ச்சில் சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. அது கவர்னரின் இசைவிற்கு அனுப்பப்பட்டது. அதன் தற்போதைய நிலை குறித்து கவர்னரின் செயலாளர் டிச.,9 ல் தெரிவிக்க வேண்டும். 85 பேரின் கல்விச் சான்றை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!