Advertisement

பி.ஆர்க்., படிப்பில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு; அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

Share

சிங்கப்பூரை சேர்ந்த ஷிவானி என்பவர் தாக்கல் செய்த மனு:
பி.ஆர்க்., எனப்படும், கட்டடக்கலை படிப்பில் சேர, வெளிநாடு வாழ் இந்தியருக்கான பிரிவில், விண்ணப்பிக்க விரும்பினேன். ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியவில்லை. அண்ணா பல்கலையில் கேட்டபோது, பி.ஆர்க்., படிப்பில், வெளிநாடு வாழ் இந்தியருக்கான ஒதுக்கீடு மற்றும் வெளிநாட்டவருக்கான ஒதுக்கீடு எதுவும் இல்லை என, தெரிவிக்கப்பட்டது. என்னை, இந்த ஒதுக்கீட்டின் கீழ், சென்னை, கிண்டியில் உள்ள கட்டடக்கலை கல்லுாரியில் சேர்க்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஏ.ராமலிங்கம் ஆஜராகி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, 15 சதவீத ஒதுக்கீடு வழங்குவது குறித்து, கட்டடக்கலை கவுன்சில் முடிவெடுத்து, அண்ணா பல்கலையிடம் தெரிவிக்கும்படி, ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கவுன்சில் இன்னும் முடிவெடுக்கவில்லை, என்றார்.
அண்ணா பல்கலை சார்பில், வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி, கட்டடக்கலை கவுன்சில், 15 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக, பல்கலைக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. ஜூலை மாதம் கூட, கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
கட்டடக்கலை கவுன்சில் சார்பில், வழக்கறிஞர் ஷேக்பீர் ஆஜராகி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்குள், என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு வழங்கலாம் என, கல்வி நிறுவனங்களுக்கு, 2013ம் ஆண்டிலேயே குறிப்பு அனுப்பப்பட்டு விட்டது, என்றார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
கட்டடக்கலை கவுன்சில் அளித்த விளக்கத்தின்படி, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்குள், ஒதுக்கீடு வழங்குவதாக, அண்ணா பல்கலை வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், அண்ணா பல்கலை தரப்பில், அதற்கான அறிவிப்பும் வெளியிடுவதாக கூறினார்.
அண்ணா பல்கலை எடுக்கும் முடிவை அமல்படுத்துவதாக, உயர் கல்வித்துறை மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான செயலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே, கட்டடக்கலை கவுன்சில் அளித்த விளக்கத்தை பின்பற்றி, இரண்டு வாரங்களில், அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட வேண்டும். குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க ஏதுவாக, விண்ணப்பத்தில், ஒதுக்கீடு பற்றி குறிப்பிட வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
என்.ஆர்.ஐ., அட்மிஷன் அறிவிப்பு
அண்ணா பல்கலையில், வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு,வரும், 19 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையின் நேரடி வளாக கல்லுாரிகளான, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரிகளில், ௫ சதவீத இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிள்ளைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இந்த மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலையின் அயல்நாடு மாணவர்களுக்கான மையம் நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள், வரும், 19ம் தேதி முதல், தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மாணவர்களுக்கான தகவல் குறிப்பேடு மற்றும் விபரங்களை, அன்று முதல், அண்ணா பல்கலையின், www.annauniv.edu/cfa/nri.html என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement