Advertisement

நீட் தேர்வில் தொடரும் தில்லுமுல்லு தந்தையுடன் மருத்துவ மாணவர் கைது

சென்னை: என் மகனுக்கு பதிலாக, பீஹாரில் வேறு ஒரு நபரை, நீட் தேர்வு எழுத வைத்து, 50 இடங்களுக்குள் தேர்ச்சி பெற வைத்து, சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்த்தேன், என, மருத்துவ மாணவருடன் கைது செய்யப்பட்டுள்ள, அவரது தந்தை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணை
தேசிய தேர்வு முகமை நடத்திய, நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.தனக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்து, தேனி அரசு கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சேர்ந்த, சென்னையைச் சேர்ந்த உதித்சூர்யா உட்பட, ஏழு மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என, 16 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., நடத்திய, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்ச்சி பெற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த தனுஷ்குமார், 20, சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு படிப்பது தெரிய வந்தது.அவரையும், அவரது தந்தை தேவேந்திரன், 53, என்பவரையும் போலீசார், நேற்று கைது செய்தனர்.
ஆசை
போலீசாரிடம், தேவேந்திரன் அளித்துள்ள வாக்குமூலம்:கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் திருமண மண்டபம் நடத்தி வருகிறேன். என் மகன் தனுஷ்குமாரை டாக்டராக்க ஆசைப்பட்டேன். அதற்காக, 2018ல், பெங்களூரில், நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்த, தனியார் மையத்தை அணுகினேன். அந்த மையத்தின் நிர்வாகிகள், உங்கள் மகனுக்கு பதிலாக வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைக்கிறோம் என்றனர்.
அதற்காக, 20 லட்சம் ரூபாய் கொடுத்தேன். அவர்களுடன் சேர்ந்து, ஹிந்தி தெரியாத என் மகனுக்கு பதிலாக, பீஹார் மாநிலத்தில், வேறு ஒருவரை, தேர்வு எழுத வைத்து, 50 இடங்களுக்குள் தேர்ச்சி பெறச்செய்தேன். நீட் தேர்வே எழுதாத என் மகனை, சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில் சேர்த்தேன். இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement