Advertisement

குடியரசு தின விழாவில் ராணுவ வலிமையை பறைசாற்றியது அணிவகுப்பு

Share

புதுடில்லி: டில்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில், பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடந்தது. கலாசார பெருமைகளை விளக்கும் வகையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சார்பில், அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம் பெற்றன.
நாட்டின், 71வது குடியரசு தின விழா, நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. மாநில தலைநகரங்களில், அந்தந்த மாநில கவர்னர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தலைநகர் டில்லி, குடியரசு தின விழாவை யொட்டி, புதுப்பொலிவு பெற்றிருந்தது. தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அதிபர் ஜெயரில் பொல்சனரோ, சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.
நேற்று அதிகாலையில், பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில் புதிதாக கட்டப்பட்ட போர் வீரர் நினைவிடத்துக்குச் சென்று, மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.
முதல் முறை
குடியரசு தின விழா அன்று, பிரதமர், போர் வீரர் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவது இதுவே முதல் முறை. இதற்கு முன், இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜோதி ஜவானில் தான், மரியாதை செலுத்துவது வழக்கம். மரியாதை செலுத்தியதும், குடியரசு தின அணிவகுப்பு நடக்கும் இடமான, வரலாற்று சிறப்பு மிக்க ராஜபாதைக்கு, பிரதமர் மோடி வந்தார். சிறிது நேரத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரேசில் அதிபர் ஜெயரில் பொல்சனரோவும் காரில் வந்தனர்; அவர்களை பிரதமரும், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தும் வரவேற்றனர்.
இதன் பின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது, 21 குண்டுகள் முழங்கப்பட்டன. தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டர்கள், ராஜ பாதையிலும், குடியரசு தின விழாவை காண கூடியிருந்த மக்கள் மீதும், மலர்களை துாவின. இதையடுத்து, இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில், ராணுவத்தின் நவீன ஏவுகணை, ஆயுதங்கள், பீரங்கிகள் ஆகியவை அணிவகுத்து வந்தன.
குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக, தனுஷ் கன் சிஸ்டம் பங்கேற்றது. கேப்டன் மிரிகாங் பரத்வாத், இதற்கு தலைமை வகித்தார். இது, 36.5 கி.மீ., தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் உடையது.
இந்திய விமானப் படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட. சின்னுாக், அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் அணிவகுப்பில் இடம் பெற்றன. ரபேல், தேஜாஸ் போர் விமானங்கள், ஆகாஷ், அஸ்த்ரா ஏவுகணைகளின் மாதிரிகளும் அணிவகுப்பில் இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து, ராணுவம், விமானப் படை, கடற்படை வீரர்களின் பிரமாண்ட அணிவகுப்பு துவங்கியது.
கலை நிகழ்ச்சிகள்
ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் மிடுக்குடன் அணிவகுப்பில் பங்கேற்றது, பொதுமக்களிடையே நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது. ஒட்டகப் படைப் பிரிவும் அணிவகுப்பில் இடம் பெற்று, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.இதன்பின், என்.சி.சி., உள்ளிட்ட மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த பிரிவினரின் அணிவகுப்பும் அரங்கேறியது. பின், நாட்டின் பன்முகத் தன்மை மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், பல்வேறு மாநிலங்கள் சார்பில், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன.
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பிலும், நீர்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும், அந்தந்த துறைகளின் சாதனைகளை விளக்கும் ஊர்திகள் இடம் பெற்றன. இறுதியாக, மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அத்வானி, சோனியா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், மாணவ - மாணவியர், இந்த அணிவகுப்பை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். அணிவகுப்பில் பங்கேற்ற வீரர்களை, கைதட்டி உற்சாகப்படுத்தினர். விழா முடிந்ததும், ராஜபாதையில் நடந்து சென்ற பிரதமர் மோடி, திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவியரை நோக்கி, கைகளை அசைத்து உற்சாகப்படுத்தினார்.
வழி நடத்திய தான்யா!
டில்லியில், நேற்று நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், அனைத்து ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமையேற்று வழி நடத்தி சென்றவர், கேப்டன் தான்யா செர்ஜில், 26. இவரது தாத்தா, தந்தை ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். நான்காவது தலைமுறையாக தான்யாவும், ராணுவத்தில் இணைந்து, நாட்டுக்காக சேவை செய்து வருகிறார்.
இது குறித்து தான்யா கூறுகையில், இளம் வயதிலேயே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் தந்தையின் ராணுவ சீருடைகளை அணிந்து பார்ப்பேன். ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமையேற்றதை, எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன், என்றார். கடந்தாண்டு குடியரசு தின விழா அணிவகுப்பின் போது, ராணுவத்தைச் சேர்ந்த பாவனா கஸ்துாரி, அனைத்து ஆண்கள் படைப் பிரிவுக்கு தலைமை வகித்தார். அவருக்கு பின், தான்யாவுக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது.
விழா துளிகள்
எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை துல்லியமாக தாக்கி முறியடிக்கும், ஏசாட் ஏவுகணை, மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், நேற்றைய அணிவகுப்பில் முதல் முறையாக இடம் பெற்றது.விமானப் படைக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்லுதல், போர் மற்றும் ஆபத்து காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட சின்னுக் ஹெலிகாப்டர்களும், அணிவகுப்பில் இடம் பெற்றன.
அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும், முதல் முறையாக அணிவகுப்பில் இடம் பெற்றன. இந்த ஹெலிகாப்டரில் இருந்து ராக்கெட்டுகளை ஏவ முடியும். சிறிய பீரங்கி வடிவிலான, தனுஷ் கன் சிஸ்டம் என்ற ஆயுதமும், முதல் முறையாக குடியரசு தின விழா அணி வகுப்பில் நேற்று பங்கேற்றது. இது, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே, குடியரசு தின விழா, சுதந்திர தின விழாக்களில் பங்கேற்கும்போது, பிரதமர் மோடி, நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், நீண்ட தலைப்பாகை அணிவதை வழக்கமாக வைத்துள்ளார். அது போலவே நேற்றும், காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 65 வீரர்கள், இரு சக்கர வாகனங்களில் வந்து, பிரமிக்க வைக்கும் சாகசங்களை நிகழ்த்தினர். ரிசர்வ் போலீஸ் படையின் பெண்கள் இரு சக்கர வாகன அணிவகுப்புக்கு, இன்ஸ்பெக்டர் சீமா நாக் தலைமை வகித்து, வழி நடத்தி சென்றார். குடியரசு தின விழாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த மாலத் தீவுகள் அதிபர் முகமது இப்ராகிம், இலங்கை பிரதமர் ராஜபக்சே ஆகியோருக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, டில்லியில் உள்ள தன் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.

Share

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement