Advertisement

மாணவி தற்கொலை வழக்கு; ஐ.ஐ.டி., இயக்குனருக்கு மிரட்டல் கடிதம்


கேரளாவைச் சேர்ந்தவர் பாத்திமா லத்தீப், 21. இவர், சென்னை, கிண்டியில் உள்ள, உயர் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,யில், முதுநிலை பட்டப்படிப்பு படித்தார். அங்குள்ள விடுதியில் தங்கி இருந்த இவர், நவம்பர், 9ல் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, சென்னை, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான, சிறப்பு தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்களை, பாத்திமா லத்தீப்பின் தந்தை அப்துல் லத்தீப், சகோதரி ஆயிஷா ஆகியோர் சந்தித்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
அதன் பின், அப்துல் லத்தீப் அளித்த பேட்டி: என் மகள் மரணம் குறித்து, கோட்டூர்புரம் போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து இறந்தார் என்பது, மர்மமாக உள்ளது. என் மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுகிறது. பாத்திமா லத்தீப்பின் உடலில் வேறு ஏதேனும் மருந்து செலுத்தப்பட்டதா என்பது குறித்து, பிரேத பரிசோதனையில் ஆய்வு செய்யவில்லை; அதை, வீடியோ பதிவும் செய்யவில்லை.
ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள, கண்காணிப்பு கேமரா பதிவுகளை, போலீசார் முறையாக ஆய்வு செய்யவில்லை. என் மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறும் நாளில், அங்கு பிறந்த நாள் விழா நடந்துள்ளது. என் மகளின் மரணத்திற்கு, மூன்று பேராசியர்கள் மட்டுமே அல்ல; ஏழு மாணவர்களும் காரணமாக இருந்துள்ளனர்.
என் மகள் தொடர்பான வழக்கு, மிகவும் சிக்கலாக உள்ளது. உறுதியான ஆதாரங்களுடன், தொடர்புடைய நபர்களை பிடிப்பதற்கான விசாரணை நடந்து வருவதாக, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தெரிவித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு, நேற்று முன்தினம், மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது.
அதில், மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு காரணமான, மூன்று பேராசிரியர்கள் தற்கொலை செய்து இறப்பர் என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் விசாரித்து வருகிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement