Advertisement

69 சதவீதத்திற்கு பாதிப்பில்லாமல் 10 சதவீத இடஒதுக்கீட்டில் முடிவு

சென்னை: தமிழகத்தில், ஏற்கனவே உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, எந்தவித குந்தகமும் ஏற்படாமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, நல்ல முடிவு எடுக்கப்படும், என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன்: முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, முடிவு செய்வதற்காக, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது; என்ன முடிவு எடுக்கப்பட்டது?
துணை முதல்வர், பன்னீர்செல்வம்: பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினருக்கு, மருத்துவ கல்லுாரிகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால், கூடுதலாக, 1,000 இடங்கள் கிடைக்கும். இது தொடர்பாக முடிவு செய்ய, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. தமிழகத்தில், 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, சட்ட பாதுகாப்பை பெற்று தந்தவர், ஜெயலலிதா. அதற்கு குந்தகம் விளைவிக்காத வகையில், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, நல்ல முடிவு எட்டப்படும்.
துரைமுருகன்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி கூட்டம் என கூறிவிட்டு, தேர்தலில் நிற்காத கட்சிகளை எல்லாம் அழைத்துள்ளீர்கள். எந்த அடிப்படையில், கட்சிகளை தேர்வு செய்தீர்கள்?
முதல்வர்: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை, அழைத்து பேசவே முடிவு செய்தோம். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சில கட்சிகளை அழைக்கும்படி கூறினார். அதை ஏற்று, சில கட்சிகளை அழைத்தோம்.
துரைமுருகன்: எம்.பி.,க்களை வைத்துள்ள கொங்குநாடு கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றை அழைக்கவில்லை.
பன்னீர்செல்வம்: தி.க., தலைவரை அழைக்கும்படி, ஸ்டாலின் கூறினார். அவர் கூறிய சில கருத்துகள், பயனுள்ளவையாக இருந்தன. அதேபோல், சில கட்சி தலைவர்கள், தனி கொள்கை கொண்டிருந்தாலும், அவர்களையும் அழைத்து, கருத்துகளை கேட்டோம். கட்சிகளில் பாகுபாடு பார்க்கவில்லை.
எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: தி.க., தலைவரை அழைக்கும்படி தான் கூறினேன்; மற்ற கட்சி தலைவர்கள் யார் பெயரையும் கூறவில்லை. ஆனால், ஜான் பாண்டியன் கட்சி, புதிய பாரதம் கட்சியினர் வந்திருந்தனர். அவர்கள் அழைக்கப்படுகிற போது, மற்றவர்களையும் அழைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, முதல்வரும் வந்திருக்க வேண்டும்.
முதல்வர்: அழைப்பு கடிதத்தில், துணை முதல்வர் தலைமை வகிப்பார் என்றே குறிப்பிட்டிருந்தோம். நான் வந்திருந்தாலும் சரி; துணை முதல்வர் வந்திருந்தாலும் சரி. அனைவரின் கருத்தையும், அரசு பரிசீலிக்கும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • J.Isaac - bangalore,India

    அதிகபட்சம் மாதம் அறுபது ஆயிரம் சம்பாதிப்பவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பது கேலிக்கூத்து .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement