Advertisement

இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்பது எப்படி?


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தமிழக அரசின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்து உள்ளனர்.இதில், பொது பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ரோபோட்டிக்ஸ் பயிற்சிஇந்த கவுன்சிலிங்கில், பாடப் பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து, விளக்கம் தரும் வகையில், நம் நாளிதழ் சார்பில், உங்களால் முடியும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து, நேற்று, தி.நகரில் உள்ள, கிருஷ்ண கான சபாவில், இந்த நிகழ்ச்சி, காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை நடத்தப்பட்டது. இதில், கவுன்சிலிங் தொடர்பாக, மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு, ஆலோசனை அளிக்கப்பட்டது.
இன்ஜினியரிங், ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து, பர்கூர் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர், டி.ஆழ்வார்சாமி விளக்கம் அளித்தார். பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது மற்றும் அவற்றின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களுக்கு, கல்வி ஆலோசகர், ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை தந்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தகவல்கள் அடங்கிய, வழிகாட்டி கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.தமிழகம் முழுவதும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும், 1,000 மாணவர்களுக்கு, ரோபோட்டிக்ஸ் பயிற்சியும், 50 மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் படிப்புக்கான உதவித் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, நம் நாளிதழுடன் இணைந்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
கற்றால் தான் இனி வேலை
இன்ஜினியரிங் படிப்புடன் சேர்த்து, தொழில்நுட்பத்தையும் மாணவர்கள்கற்றால் மட்டுமே, இனி எதிர்பார்க்கும் சம்பளத்தில் வேலை கிடைக்கும், என, கல்வி ஆலோசகர், ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
உங்களால் முடியும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:எந்த படிப்பை படித்தால், என்ன வேலை கிடைக்கும் என, பலரும் கேட்கின்றனர். வரும் காலங்களில், இந்த படிப்புக்கு இந்த வேலை தான் என்ற நிலைமை இருக்காது.பாட புத்தகங்களை தாண்டி, வேலைக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை யார் தெரிந்து கொள்கின்றனரோ அவர்களுக்கு தான் வேலை கிடைக்கும்.சிலர், கலை படிப்புகளையும், விவசாய படிப்பையும் படித்தால், ஐ.ஏ.எஸ்., போன்ற, போட்டித் தேர்வுகளை எழுதி, அரசு வேலை பெறலாம் என, நினைக்கின்றனர்.ஆண்டுக்கு, 1,000 பணியிடங்கள் மட்டுமே, இந்திய ஆட்சி பணிகளில் உள்ளன. சென்னை அண்ணா நகரில் மட்டுமே, 20க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களில், 1,000க்கும் மேற்பட்டோர், இந்த தேர்வுக்கு படிக்கின்றனர்.கடந்த காலங்களில், 100 வேலைகளில், 71 வேலைகளை மனிதர்கள் செய்தனர்; 29 வேலைகளை இயந்திரங்கள் செய்தன.
அடுத்த, ஆறு ஆண்டுகளில், 100 வேலைகளில், 51 வேலைகளை மட்டுமேமனிதர்கள் செய்வர்; 49 வேலைகளை, இயந்திரங்களே செய்யும். அதாவது, டெக்னாலஜி இல்லாமல், எதிர்காலத்தில் எந்த வேலையும் நடக்காது. அந்த டெக்னாலஜி என்ன என்பதை, இன்ஜினியரிங் படிப்போர் தெரிந்து, அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.தற்போது, கல்லுாரிகளில் வளாக நேர்காணல்கள் குறைந்து, ஆன்லைன் போட்டிகள் அதிகரித்துள்ளன. படிப்பையும், மதிப்பெண்ணையும் விட, திறமையுள்ளவர்களுக்கே வேலை கிடைக்கிறது.தொழில்நுட்பம் தவிர்த்து, ஜப்பான், ஜெர்மனி மொழிகளையும் கற்றால் நல்ல எதிர்காலம் உண்டு. இவ்வாறு, ஜெயபிரகாஷ் காந்தி பேசினார்.
வேலைவாய்ப்பு அதிகம்
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர், ஸ்ரீராம் பேசியதாவது:தினமலர் நாளிதழ் சார்பில், உங்களால் முடியும் நிகழ்ச்சி, 10 ஆண்டுகளாக நடக்கிறது.
கல்லுாரியை தேர்வு செய்வது, பாடத்திட்டத்தை தேர்வு செய்வது உள்ளிட்டவற்றில் மாணவர்கள், பெற்றோர் சந்திக்கும் குழப்பங்களுக்கு, இந்நிகழ்ச்சி விடையளிக்கிறது. இணையதளம் மூலம், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு எப்படி விண்ணப்பிப்பது என, வல்லுனர்கள் எளிதாக விளக்கினர். தற்போது, நிறுவனங்கள், மதிப்பெண் அதிகம் பெற்ற மாணவர்களை விட, தனித்திறமை உள்ளவர்களை, வேலைக்கு அமர்த்துகின்றனர். அதனால், பொறியியல் பயிலும் போதே, மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் நாடு வளர்ச்சி பெற, கட்டட பொறியியல், போக்குவரத்து, நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில், வளர்ச்சியடைய வேண்டும்.
இத்துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மருத்துவம் படித்து வாழ்க்கையில் நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும், இன்ஜினியரிங் படிப்பை முடித்தும், நீங்கள் பெற முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
வாய்ப்பு அளிக்கப்படும்
பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர், டாக்டர் ஆழ்வார்சாமி பேசியதாவது: தமிழகத்தில், இன்ஜினியரிங் கல்லுாரி சேர்க்கையை, முழுக்க, அண்ணா பல்கலை நடத்தி வந்தது. இதற்காக, இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்பட்டு வருகிறது. கவுன்சிலிங் விண்ணப்பிப்பதை, பதிவு செய்வது, ரேண்டம் எண், சான்றிதழ் சரிபார்த்தல், தரவரிசை பட்டியல், விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்வது என, பிரிக்கலாம்.கவுன்சிலிங் கட்டணமாக, பொதுப்பிரிவினர், 5,000 ரூபாயும், மற்றவர்கள், 1,000 ரூபாயும் செலுத்த வேண்டும். இது நீங்கள் தேர்வு செய்யும் கல்லுாரி கட்டணத்தில் குறைக்கப்படும். விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லுாரியை தேர்வு செய்ய, மூன்று நாள் அவகாசம் தரப்படும்.மூன்றாவது நாள், 5:00 மணியுடன், அவகாசம் முடிந்து விடும்.
அதற்குள், நாம் பதிவிட்ட அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதை சரிபார்த்து, கணக்கை, லாக் செய்ய வேண்டும்.பின், கவுன்சிலிங்கில், விருப்பப்பட்ட பாடத்தை தேர்வு செய்த பின், தற்காலிக எண் ஒதுக்கீடு செய்யப்படும். கல்லுாரியின் மாவட்டம், கல்லுாரியின் பெயர், பாடப்பிரிவு, கல்லுாரி கவுன்சிலிங் எண் ஆகியவற்றைக் கருத்தில் வைத்து, பாடத்தை தேர்வு செய்யலாம்.நீங்கள் தேர்வு செய்த கல்லுாரிகளை மாற்ற நினைத்தாலும், வாய்ப்புகள் அளிக்கப்படும். தேர்வு செய்த கல்லுாரி பாடப்பிரிவுகளின் பட்டியலை, பதிவிறக்கம் செய்து, பிரின்ட் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு, அவர் பேசினார்.
உற்சாகம் ஊட்டும் நிகழ்ச்சி
ஆன்லைன் கவுன்சிலிங் குறித்து, மாணவர்களை விட பெற்றோர் தான், அதிக பயத்துடன் இருந்தோம். இந்த நிகழ்ச்சி, எங்களை தட்டிக் கொடுத்து, உற்சாகப்படுத்தி உள்ளது. - வெங்கடேசன், தாம்பரம்.இன்ஜினியரிங் கல்லுாரிகளின் நடைமுறைகள், பாட பிரிவுகளின் வகைகள் பற்றி, இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டோம். தொழில் துறையின் எதிர்காலம் பற்றியும், அறிந்து கொண்டோம்.- சுதர்சன், மயிலாப்பூர்.
மாணவர்கள், பெற்றோருக்கு பயனுள்ள நிகழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை தினமலர் நாளிதழ், கல்வியாளர்களின் வழியாக விளக்குகிறது. கல்வி நிகழ்ச்சிகளுக்கு, தினமலர் முன்னோடியாக உள்ளது.- பத்மநாபன், வடபழனி.கவுன்சிலிங்கில், பாடத் தேர்வின் போது, எப்படி நடக்க வேண்டும் என்ற ஆலோசனை கிடைத்தது. குறுகிய வட்டத்தில் இருந்த எங்களுக்கு, இந்த நிகழ்ச்சியில் பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.சண்முகநாதன் தாம்பரம்மாணவர்கள் பேட்டிநான், நீட் தேர்வு எழுதி உள்ளேன்.
எனக்கு, இன்ஜினியரிங் குறித்து எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ளும் நோக்கில், உங்களால் முடியும் நிகழ்ச்சிக்கு வந்தேன். பொறியியல் படிப்பின் முக்கியத்துவம் குறித்தும் தெரிந்துக் கொண்டேன்.- பி.ஜானவி, -அரும்பாக்கம்
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியின் ஆலோசனைகள், மிகவும் உதவிகரமாக இருந்தன. நிகழ்ச்சியில் பொறியியல் கவுன்சிலிங் குறித்து, எளிமையாக விளக்கினர். இந்த நிகழ்ச்சி, மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. - வி.சுரேஷ் குமார், அம்பத்துார்
இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் குறித்தும், பாடத்திட்டத்தை தேர்வு செய்வதுடன், தனித் திறனை வளர்க்க வேண்டும் என்பது குறித்தும், கல்வியாளர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தினர்.- கவுன்சிலிங் குறித்த விளக்கங்கள் மிகவும் உதவியாக இருந்து.டி.பிரதிபா, மந்தைவெளி
இந்த நிகழ்ச்சி, கவுன்சிலிங் குறித்த தெளிவை ஏற்படுத்தியதால், பயம் நீங்கி உள்ளது. இ.சி.இ., மட்டுமே படிக்க நினைத்தேன். தற்போது, இ.இ.இ., உள்ளிட்ட படிப்புகளையும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது. அதற்கு, இந்த நிகழ்ச்சி தான் காரணம்.- ஸ்ரீவித்யா, தாம்பரம்.
ஜெயபிரகாஷ் காந்தி, தற்கால இன்ஜினியரிங் பட்டதாரிகளின் நிலை, கல்லுாரிகளின் நிலை, விளம்பரதாரர்களின் நிலை, ஆசிரியர்களின் நிலை என, அனைத்தையும் மிகத் தெளிவாக விளக்கினார். அதனால், படிப்பை தேர்வு செய்யும் முன், எல்லாவற்றிலும், கவனம் செலுத்த வேண்டும் என்ற, எச்சரிக்கை உணர்வை தந்தது.- ஸ்ரீலட்சுமி, தாம்பரம்நான், பயோடெக்னாலஜி படிக்க நினைத்திருந்தேன்.
அது, ஆய்வு படிப்புகள் வரை படித்தாலும், உள்நாட்டில் வேலை கிடைக்காத நிலை ஏற்படும் எனக் கூறியதால், தற்போது, கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற படிப்புகளில் ஒன்றை, தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளேன்.- ஸ்ருஷ்டி, வேளச்சேரி
உங்களால் முடியும் நிகழ்ச்சியால், அதிகமான தகவல் மற்றும் ஆலோசனைகள் கிடைத்தன. பாடத்திட்டங்களை படிப்பதுடன், வேலைக்கு தேவையான தனித் திறமைகளை வளர்க்க வேண்டும் எனக் கூறினர். பள்ளிப்படிப்பை முடித்த எங்களுக்கு, இது உதவியாக இருந்தது.- ஆர்.சீதாலட்சுமி, ஆதம்பாக்கம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement