Advertisement

ஆசிரியர் மாறுதல் விபரம் தெரியுமா? கல்வி செயலருக்கு கோர்ட் கேள்வி

மதுரை: ஆசிரியர் கவுன்சிலிங் முறைகேடு தொடர்பான வழக்கில், இடமாறுதல் விபரம், பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு தெரியுமா? என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது. மேலும், இயக்குனர் தாக்கல் செய்த விபரம் சரி தான் என்பதற்கு, செயலர் உத்தரவாதம் தர வேண்டும் என உத்தரவிட்டது.
மதுரை, ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:பள்ளி ஆசிரியர்கள் நிர்வாக ரீதியான, இடமாறுதல் தொடர்பாக, 2016ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதை தவறாக பயன்படுத்தி, விதிகளை பின்பற்றாமல் இடமாறுதல் செய்கின்றனர். 10 ஆண்டுகளாக, ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களால் இடமாறுதல் பெற முடியவில்லை.ஆனால், ஐந்து மாதங்களில் ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு சிலர் மாறுதல், பதவி உயர்வு பெறுகின்றனர்.பொது மாறுதல் கவுன்சிலிங்கில் வெளிப்படைத் தன்மை இல்லை. லஞ்சம் பெற்று, சட்டவிரோதமாக இடமாறுதல் அளிக்கப்படுகிறது.
2018 - 19 க்கு இடமாறுதல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து மேல் நடவடிக்கைக்கும் தடை விதிக்க வேண்டும். கடந்த, 2018ல் ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் முறைகேடு, விதிமீறல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.
அரசாணைக்குப் பின், இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்கள், எப்போது காலி இடங்கள் உருவானது, யார் யார் மூலம் காலி இடங்கள் நிரப்பப்பட்டன என்ற விபரத்தை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சார்பில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.நீதிபதிகள் உத்தரவு:ஆவணங்கள் தாக்கல் செய்ய, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலருக்குத்தான் இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இயக்குனர் தாக்கல் செய்து உள்ளார்.
ஆசிரியர்கள் இடமாறுதல் விபரம் செயலருக்குத் தெரியுமா? இயக்குனர் தாக்கல் செய்த விபரம் சரி தான் என்பதற்கு முதன்மைச் செயலரின் உத்தரவாதம் மற்றும் கூடுதல் ஆவணங்களை, வரும், 28ல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement