dinamalar telegram
Advertisement

அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்

Share

சென்னை: ஆதிதிராவிடர்களுக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டில், அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் பிப். 26ம் தேதி தாக்கல் செய்தார்.
மசோதாவில் கூறியிருப்பதாவது:
ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பட்டியல் ஜாதிகளான 76ல் அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, மடிகா, பகடை, தோட்டி, ஆதி ஆந்திரா ஆகிய ஏழு ஜாதிகள், ‘அருந்ததியர்’ என அழைக்கப்படுகின்றன.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, பட்டியல் ஜாதிகளின் மொத்த மக்கள் தொகை ஒரு கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 507 என இருக்கும் போது, அதில் அருந்ததியர் 18 லட்சத்து 61 ஆயிரத்து 457 என இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, பட்டியல் ஜாதிகளின் மொத்த மக்கள் தொகையில் 15.70 சதவீதம். கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை, அரசு பணிகளில் நியமனம் ஆகியவற்றில் ஆதிதிராவிடர்களுக்கு 18 சதவீத நலனைப் பெற்று வருகின்றனர். தமது மக்கள் தொகையின் விகிதாசாரத்துக்கு ஏற்ப ஒதுக்கீட்டு அளவைத் சட்டப்பூர்வ பங்காக பெறும் வகையில், பிற ஜாதிகளுடன் போட்டியிட இயலவில்லை என்பதாலும், 58 ஆண்டுகளுக்கு மேல் பட்டியல் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும்,
அருந்ததியருக்கு குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைக்கவில்லையென பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் அரசிடம் முறையிட்டன.
ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு உள்ளாக அருந்ததியினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க, நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் குழு பரிசீலனை செய்தது.
ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் 18 சதவீதம் என்ற ஒதுக்கீட்டுக்குள்ளாக அருந்ததியினருக்கு 3 சதவீத ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரைத்தது.
ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை எவ்வித தயக்கமுமின்றி மாநில அரசு ஏற்று, பட்டியல் ஜாதிகளுக்கான தேசிய ஆணையத்துடன் ஆலோசித்து, சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்தது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ளவாறு, நேரடி நியமனங்களில் மட்டுமே, பட்டியல் ஜாதிகளுக்கான ஒதுக்கீட்டுக்குள்ளாக அருந்ததியினருக்கு ஒதுக்கீடு செய்ய, காலம் தாழ்த்தாமல் சட்டம் இயற்ற, மசோதா தயாரிக்கப்பட்டது.
ஆந்திர அரசுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின், பஞ்சாப் அரசு 12.5 சதவீத உள்ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றியது. எந்த கோணத்தில் பார்த்தாலும் அருந்ததியினருக்கான ஒதுக்கீடு, பாகுபாடு காட்டுவதாகக் கொள்ள இயலாது. இது, இந்திய அரசமைப்பின் 14ம் பிரிவுப்படி முக்கிய வகை முறைகளை மீறுவதாகவோ, அவற்றில் இருந்து பிறழ்வதாகவோ கொள்ள இயலாது.
இவ்வாறு மசோதாவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதா மீது சட்டசபையில் விவாதம் நடந்தது. அ.தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் மசோதாவில் திருத்தம் வேண்டுமென வலியுறுத்தின. மற்ற கட்சிகள் அனைத்தும் ஏகமனதாக மசோதாவை வரவேற்றதால், குரல் ஓட்டெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement