Advertisement

மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு

ADVERTISEMENT


புதுச்சேரி : புதுச்சேரியில், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர், கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு, முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி, கரையாம்புத்துாரை சேர்ந்தவர் கவுரி. புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள முல்லை நகர், பாண்டியன் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் ரோஜா, 30; இவர், பொள்ளாச்சியை சேர்ந்த ஷெரிப் என்பரை 12 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை செய்தனர். இவர்களுக்கு, யாசன், 11; பிந்து, 6; என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஷெரிப் உடல் நல குறைவால் இறந்தார். ரோஜா மட்டும் பனியன் கம்பெனில் வேலை செய்து குழந்தைகளை கவனித்து கொண்டார். அப்போது, அதே கம்பெனியில் டிரைவர் வேலை செய்த கோயம்புத்துாரை சேர்ந்த விக்னேஷ், 34; என்பவருடன் ரோஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் 2 ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், ஒரு ஆண்டிற்கு முன், ரோஜா குழந்தைகளுடன் உருளையன்பேட்டை தாய் வீட்டிற்கு வந்து தங்கி விட்டார்.

விக்னேஷ் மொபைல்போன் மூலம் மற்றும் புதுச்சேரிக்கு நேரடியாக வந்து, தன்னுடன் வருமாறு அழைப்பு விடுத்தும், தாய் கவுரியின் உடல்நிலையை காரணம் காட்டி ரோஜா மறுத்து விட்டார்.

இந்நிலையில், நேற்று காலை, விக்னேஷ் மீண்டும் புதுச்சேரி வந்தார். குழந்தைகள் விளையாட சென்று விட்ட நிலையில், நேற்று காலை, வீட்டின் பால்கனியில் அமர்ந்து கணவன், மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, விக்னேஷ், தன்னுடன் திருப்பூர் வருமாறு ரோஜாவை அழைத்தார். ரோஜா வர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், ரோஜாவின் கால்களை துணியால் கட்டி, அவரது வாயில் துணியை வைத்து அழுத்தி பிடித்து கொண்டார். பின்பு தயாராக கொண்டு வந்திருந்த கத்தியால், ரோஜாவின் கழுத்து, வயிறு, மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் ரோஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

அலறல் சத்தம் கேட்டு, ரோஜாவின் தாய் கவுரி ஓடி வந்தார். அப்போது பால்கனியில் நின்றிருந்த விக்னேஷ், கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை லேசாக அறுத்துக் கொண்டு, முதல் மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலையில் கிடந்த விக்னேஷை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ரோஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எஸ்.பி. சுவாதிசிங், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

உருளையன்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தாய் ரோஜா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து ஓடி வந்த அவரது குழந்தைகள், பாட்டி கவுரியை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement