Advertisement

கண்ணன் ஆதரவாளர்களின் ஆதரவு யாருக்கு? புதுச்சேரி அரசியலில் திருப்பம்



புதுச்சேரியில் 3 முறை புதிய கட்சி துவக்கி வெற்றி முத்திரை பதித்தவர் கண்ணன். சபாநாயகர், அமைச்சர், எம்.பி., என முக்கிய பதவிகளை வகித்த அவர், தொண்டர்கள் செல்வாக்குமிக்க தலைவராகவும் திகழ்ந்தார்.

கடைசியாக, காங்., கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்த அவர், கடந்த சட்டசபை தேர்தல் சமயத்தில் பா.ஜ.,வில் ஐக்கியமானார். பின், மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்த கண்ணன், பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக கடந்த ஜூலையில் அறிவித்தார்.

மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முடிவு செய்து, காங்., கட்சியில் மீண்டும் இணையலாமா என்பது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, புதுச்சேரி அரசியல் கண்ணனை மையப்படுத்தி நடந்து வந்தது. குறிப்பாக, ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் அவரது முடிவும், ஓட்டு வங்கியும் திருப்பம் ஏற்படுத்த கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது தொகுதியை சேர்ந்தவரா, வேறு தொகுதியை சேர்ந்தவரா என்ற பாரபட்சம் பார்க்காமல் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியதால், கண்ணனின் தீவிர ஆதரவாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் உள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் கண்ணன் காலமானார். எந்த முடிவையும் அவர் அறிவிக்காததால், அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் எந்த கட்சியை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இளைஞர் காங்., சார்பில் கண்ணனுக்கு கடந்த வாரம் புகழஞ்சலி கூட்டத்துக்கு, காங்., ஒருங்கிணைப்பாளரும், சீனியர் துணை தலைவருமான தேவதாஸ் ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில் தமிழக காங்., சீனியர் தலைவரான பீட்டர் அல்போன்ஸ் மற்றும் புதுச்சேரி காங்., தலைவர்கள் பங்கேற்று புகழாரம் சூட்டினர்.

கண்ணனுக்கு எந்த கட்சியும் இரங்கல் கூட்டம் நடத்தாத நிலையில், காங்., கட்சி நடத்திய புகழஞ்சலி கூட்டத்தால் அவரது ஆதரவாளர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இதனால், அனைத்து தொகுதிகளில் இருந்தும் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, கண்ணனின் ஆதரவாளர்கள் காங்., கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரும் லோக்சபா தேர்தலில் கண்ணன் ஆதரவாளர்களின் ஆதரவை காங்., கட்சிக்கு ஒருங்கிணைக்கும் பணியில் தேவதாஸ் ஈடுபட்டுள்ளார். அவருக்கு காங்., மேலிடமும் 'கிரீன் சிக்னல்' காட்டி விட்டது. இதனால், காங்., கட்சியின் பலம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement