Advertisement

பதிவுத்துறையின் புதிய நடைமுறை திரும்பப் பெற கிரடாய் வலியுறுத்தல்

பதிவுத்துறையின் புதிய அரசாணையால், அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் வீடு வாங்குவோருக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதால், இதைத் திரும்பப் பெற வேண்டுமென்று 'கிரடாய்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

'கிரடாய்' கோவை கிளைத்தலைவர் இளங்கோ கூறியதாவது:

அடுக்கு மாடிக்குடியிருப்புகளில், 'பிளாட்' வாங்குவதற்கான பத்திரப்பதிவு செய்யும் முறையை தமிழக அரசு, கடந்த டிச.,1ல் இருந்து மாற்றி அமைத்துள்ளது.

இம்முறையில், அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வீடுகள் வாங்கும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நடைமுறையில், இது எந்த வகையிலும் பயனளிப்பதாக இல்லாததோடு, வீடு வாங்குவோருக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

பழைய முறைப்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கு ரூ.4 லட்சத்து 31 ஆயிரத்து 700 பதிவுச் செலவு ஏற்பட்டது. இப்போது ஏழு லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல, ரூ.3 கோடியே ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள 'பிளாட்'டுக்கு, முன்பு, ரூ.13 லட்சத்து 26 ஆயிரத்து 673 பதிவுச் செலவானது. புதிய முறையில், ரூ.27 லட்சம் செலவாகிறது.

தொகுப்பு வீடுகளில் ஒரு வீட்டுக்கு, நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பு, கட்டடத்துக்கு பொதுப்பணித்துறை மதிப்பீட்டின் அடிப்படையில், மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

அதற்கு மேல் கொடுப்பது, சர்வீஸ் சார்ந்தது. அதை வைத்து கூட்டு மதிப்பை நிர்ணயித்து, முத்திரைத் தீர்வை செலுத்தச் சொல்வது எந்த விதத்திலும் சரியானதில்லை.

ஒரே பகுதியில் உள்ள இரு வீடுகளுக்கு, தரப்படும் வசதிகளின் அடிப்படையில், மதிப்பு நிர்ணயிப்பது, நியாயமற்றது. அதிலும், கோவையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கூட்டு மதிப்பு, அதீதமாகவுள்ளது. இம்முறை தொடர்ந்தால், பெருநகரங்களில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாகும். வசிப்பிடச் செலவு இரட்டிப்பாகும். இதை, அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

கோரிக்கையை வலியுறுத்தி, இவ்வமைப்பின் சார்பில், தமிழக முதல்வருக்கு மனுவும் அனுப்பப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement