Advertisement

சுதேசி,பாரதி மில்கள் புதுச்சேரி அரசுக்கு கைமாறுகிறது: முதற்கட்டமாக ரூ.13.93 கோடி வழங்க ஒப்புதல்

ADVERTISEMENT
புதுச்சேரி: சுதேசி, பாரதி மில்கள் விரைவில் புதுச்சேரி அரசுக்கு கைமாறுகிறது.முதற்கட்ட தொகையாக 13.93 கோடி ரூபாய் ஜவுளி அமைச்சகத்திற்கு வழங்க புதுச்சேரி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ரோடியர், பாரதி, சுதேசி ஆகிய 3 பஞ்சு மில்கள் இயங்கி வந்தன. இந்த மில்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியாற்றி வந்தனர்.

மாநிலத்தின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாகவும் இந்த மூன்று மில்களும் விளங்கி வந்தன. அரசு ஊழியர்களை காட்டிலும், இந்த ஆலைகளில் வேலை செய்த ஊழியர்கள் அதிக சம்பளம் பெற்றனர்.

ஆலை தொழிலாளர்களின் சம்பள தேதியின் போது மில்களை சுற்றிலும் வியாபாரம் களை கட்டும். இத்தனை சிறப்புமிக்க இந்த மில்கள் கடந்த 25 ஆண்டுகளாக நலிவடைந்து விட்டன.மில்களின் உற்பத்தி திறன் குறைந்தது.

சம்பளம் போட முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து தொழிலாளர்களுக்கு லே-ஆப் கொடுத்தது.

முதலில் ரோடியர் மில் மூடப்படுவதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அடுத்தடுத்து குறைந்த தொழிலாளர்களை கொண்டு இயங்கி வந்த சுதேசி, பாரதி மில்களும் மூடப்பட்டன.

மாநிலத்தின் அதிக வேலை வாய்ப்புகளை வழங்க 3 பஞ்சாலைகள் திறக்க வேண்டும் என சட்டசபையில் எம்.எல். ஏ.,க்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் ஏ.எப்.டி, சுதேசி, பாரதி மில்களை திறப்பதற்கு சாத்தியக் கூறுகளே இல்லை என திட்டவட்டமாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சுதேசி,பாரதி மில் தொழிலாளர் சட்டப்படி அங்குள்ள ஊழியர்கள், அதிகாரிகள், தொழிலாளர்களுக்கு உரிய நிலுவைத் தொகையை தந்துவிட்டு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களுக்கு அந்த இடத்தை பயன்படுத்தலாம் என திட்டமிடப்பட்டது. இதற்காக, சுதேசி, பாரதி மில் நிலத்தை தேசிய பஞ்சாலை கழகத்திடம் இருந்து விலை கொடுத்து வாங்க அரசு முடிவு செய்திருந்தது.

சுதேசி, பாரதி மில்களை தேசிய பஞ்சாலை கழகத்திடமிருந்து கடந்த 2005ம் ஆண்டே 40 கோடி ரூபாய் கொடுத்து வாங்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு, முதற்கட்டமாக 3.5 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்திருந்தது.நிதி நெருக்கடி காரணமாக மீதி பணத்தை அரசு தரவில்லை.

இப்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி இந்த இரு மில்களின் இடத்தினை வாங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்ட தொகையாக 13.93 கோடி ரூபாய் ஜவுளி அமைச்சகத்திற்கு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கவர்னர் தமிழிசையும் ஒப்புதல் அளித்துள்ளார்.

எனவே விரைவில் சுதேசி,பாரதி மில்களின் இடங்கள் புதுச்சேரி அரசுக்கு கைமாற உள்ளன. அடுத்து இந்த இரண்டு மில்களிலும் எந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்தலாம் என்பதை ஆராய கமிட்டி அமைக்க தொழில் துறை முடிவு செய்துள்ளது.

வட்டி என்னாச்சு



40 கோடிக்கு வாங்க திட்டமிட்டு இருந்த சுதேசி,பாரதி மில்களின் விற்பனை தொகை அசல், வட்டியெல்லாம் குட்டி போட்டு 100 கோடிக்கு எகிறிவிட்டது. எனவே, 100 கோடி கொடுத்தால் புதுச்சேரி அரசிடம் சுதேசி, பாரதி மில்களை விற்பதாக தேசிய ஜவுளி கழகம் தெரிவித்து இருந்தது.

தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் தேசிய பஞ்சாலை கழக அதிகாரிகளை சந்தித்து பேசிய நிலையில் சுதேசி, பாரதி மில்களை வட்டியில்லாமல் 40 கோடி ரூபாயிற்கே புதுச்சேரி அரசுக்கு விற்க தேசிய பஞ்சாலை கழகம் கொள்கையளவில் ஒப்புதல் அளித்து இருந்தது. இருப்பினும் குறைந்தபட்ச வட்டியை எதிர்பார்க்கின்றது. இது தொடர்பாகவும் ஜவுளி அமைச்சகத்திடம் தொழில்துறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement