Advertisement

கிராமத்தில் தரம் குறைவாக கட்டப்படும் கழிப்பிடம் பொதுமக்கள் புகார்

ADVERTISEMENT


நெகமம் நெகமம், காட்டம்பட்டிபுதுாரில் புதிதாக கட்டப்படும் கழிப்பிடம், தரம் குறைவாக இருப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நெகமம், காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, காட்டம்பட்டிபுதுார் செல்லும் வழியில் உள்ள, ஆதிதிராவிடர் காலனியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு உள்ளவர்களுக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாததால், இப்பகுதியில் புதிதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில், 15வது நிதி குழுவில் இருந்து, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கழிப்பிடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது : இங்கு கழிப்பிடம் கட்ட வேண்டாம் என ஊராட்சி நிர்வாகத்திடம் கூறினோம். ஆனால் இங்கு உள்ள பொதுமக்களுக்கு, இங்கு கழிப்பிடம் கட்டினால் சரியாக இருக்கும் என, கழிப்பிடம் கட்டும் பணியை துவக்கினர்.

அப்படி கட்டப்படும் கழிப்பிடம் தரம்குறைவாக இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் சேதம் அடையலாம். இந்த இடம் கழிப்பிடம் அமைப்பதற்கு முன், குப்பை கொட்டும் இடமாக இருந்தது.

இங்கு தளம் அமைப்பதற்கு, எம்.சாண்ட் மற்றும் சிமென்ட் பயன்படுத்தாமல், இங்கு இருந்த பிளாஸ்டிக் குப்பை கொண்டு தளம் அமைக்கப்பட்டது.

இது பற்றி வேலை செய்யும் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அந்த கழிவை அகற்றினர்.

பொதுமக்கள் பார்வையிட்டு கூறிய பின்னரே, கழிவு அகற்றப்பட்டது. மேலும், இங்கு கட்டப்படும் கழிப்பிடத்தின் அருகில், இரண்டு தனியார் கிணறுகள் உள்ளது. கழிவு நீர் இந்த கிணற்றுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

ஒரு காலனிக்கு கழிப்பிடம் கட்டி தருவது, வரவேற்கும் வகையில் இருந்தாலும், அந்த கழிப்பிடம் தரம்குறைவாகவும், அருகில் உள்ள விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை ஒன்றிய அதிகாரிகள் கவனித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

காட்டம்பட்டி ஊராட்சித்தலைவர் மணி கூறுகையில், ''இந்த கழிப்பிடம் பற்றி ஊராட்சி துணைத்தலைவரிடம் விவாதித்து, விளக்கம் அளிக்கிறேன்,'' என்றார்.

இதுகுறித்து காட்டம்பட்டி ஊராட்சி துணை தலைவர் கிரி கதிர்வேல் கூறுகையில், ''இந்த கழிப்பிடம் ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியானது பாதி முடிவடைந்த நிலையில், இனி மாற்றம் செய்ய முடியாது,''என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement