Advertisement

குடிநீர் பிரச்னை; ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்ய முடிவு வார்டு உறுப்பினர்களும் பதவி விலக திட்டம்



மேட்டுப்பாளையம் : நிர்ணயம் செய்த அளவு குடிநீர், ஒரு மாதத்திற்குள் வழங்கவில்லை என்றால், தலைவர், வார்டு உறுப்பினர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன், துணைத் தலைவர் யுவராஜ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு, கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் கூறியுள்ளதாவது.

சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தற்போது, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சிக்கு திருப்பூர் இரண்டாவது குடிநீர் திட்டத்திலிருந்து, 2011ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு, நாள் ஒன்றுக்கு, ஒன்பது லட்சத்து, 80 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்க திட்டம் தயாரிக்கப்பட்டது.

அந்தத் திட்டம் தயாரித்த நாளிலிருந்து, இன்று வரை ஒரு நாள் கூட, ஒதுக்கீடு அளவு தண்ணீர் வழங்கவில்லை.

நாங்கள் பொறுப்பேற்ற நாள் முதல், இன்று வரை, நாள் ஒன்றுக்கு, சராசரி மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதை வைத்து, 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, குடிநீர் விநியோகம் செய்ய முடிகிறது.

இதனால் பொதுமக்கள் மத்தியில் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கிராம சபை கூட்டங்களிலும், குடிநீர் பிரச்னை குறித்து, பொதுமக்கள் மிகுந்த வேதனையையும், அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

ஊராட்சி நிர்வாகிகளாக பதவியேற்று நான்கு ஆண்டுகள் ஆகியும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையை, பூர்த்தி செய்ய முடியாததால், நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. எனவே ஒரு மாதத்திற்குள், ஒதுக்கீடு அளவு குடிநீர் வழங்காத பட்சத்தில், தலைவர், துணைத் தலைவர் உட்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகிய அனைவரும், எங்களது பதவியை ராஜினாமா செய்வோம் என்பதை, தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஒவ்வொரு மாதமும், நிலுவையின்றி குடிநீர் கட்டணத்தை முறையாக செலுத்தி வரும் எங்களுக்கு, ஒதுக்கீடு அளவு வழங்குவதில்லை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியிடம் நேரடியாகவும்,தபால் வாயிலாகவும் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் மெத்தன போக்கே இதற்கு காரணமாகும். இதனால் ஊராட்சி நிர்வாகத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மெத்தன போக்கை கண்டித்து, காரமடை ஊராட்சி அலுவலகம் முன்பு, ஒரு நாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement