Advertisement

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறக்க கோரி முறையீடு

ஈரோடு: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று மனு வழங்கினர். கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்க தலைவர் பெரியசாமி, மனு வழங்கிவிட்டு கூறியதாவது:
கீழ்பவானி பாசனம், 2.07 லட்சம் ஏக்கர் ஆயக்கட்டு நிலம் கொண்டது. இரண்டு மண்டலமாக பிரித்து, 1 லட்சத்து, 3,500 ஏக்கருக்கு, ஆக., 15 முதல் டிச., 15 வரை; இரண்டாம் மண்டலத்துக்கு, ஜன., 1 முதல், ஏப்.,30 வரை, தண்ணீர் வழங்கப்படும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி நன்செய் பாசனத்துக்கு, 19 டி.எம்.சி.,; புன்செய்பாசனத்துக்கு, 9 டி.எம்.சி., நீரை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தற்போது இரண்டாம் மண்டலத்தில், கடலை பயிருக்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. ஆனால் கடந்த, 3ம் தேதி முதல், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு, 7.7 டி.எம்.சி., வழங்க உத்தரவிட்டு, நீர் திறந்துள்ளனர். இது தவறான நீர் நிர்வாகம்.
கீழ்பவானி ஆயக்கட்டுக்கான தண்ணீரை, காவிரி தீர்ப்பின்படி வழங்க வேண்டும். முறையான நீர் நிர்வாகம் செய்ய தவறினால், விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு கூறினார்.

விவசாய சங்க நிர்வாகி
மொபைல் போன் பறிப்பு
ஈரோடு கலெக்டர் அறையில், பல்வேறு அமைப்பை சேர்ந்த, 10 நிர்வாகிகள் மனு வழங்க அனுமதித்து, அதற்கான சேர் போடப்பட்டிருந்தது. இவர்களிடம் கலெக்டர், 'அணை நீர் இருப்பை தெரிவித்து, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு முறை வைத்து நீர் திறந்தால் தண்ணீர் மீதமாகும். தற்போதுள்ள இருப்பு நீரை வைத்து, கீழ்பவானி இரண்டாம் மண்டலத்துக்கு நீர் திறக்க பரிந்துரைக்கிறோம். இந்நீர் போதுமானதாகும்' என்றார்.
அதற்குள் சில நிர்வாகிகள், சேர்களை வேகமாக இழுத்து நகர்த்தி, 'தவறான நீர் நிர்வாகம் செய்தால், கீழே உள்ள விவசாயிகளுக்கு நாங்கள் எப்படி பதில் சொல்வது' என்ற ரீதியில் கோபமாக பேசினர். கோபமடைந்த கலெக்டர், 'இது கலெக்டர் சேம்பர். இதுபோன்று அநாகரீகமாக நடக்கக்கூடாது' என கூறியதும், சில நிர்வாகிகள், மீண்டும் சேரை வேகமாக இழுத்து நகர்த்தி, 'வாங்க வெளியே போகலாம்' என பிறரை அழைத்தனர். இதை ஒரு நிர்வாகி மொபைலில் வீடியோ எடுப்பதை பார்த்த கலெக்டர், மீண்டும் கோபமடைந்து, 'அவரது மொபைல் போனை பறிமுதல் செய்யுங்கள்' என்றதும், போனை உதவியாளர் பறிமுதல் செய்து, அறையில் இருந்து வெளியேற்றினார். அதன்பின் மனுவை வழங்கிய நிர்வாகிகளில் சிலர், வருத்தம் தெரிவித்து சென்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement