Advertisement

கத்தாங்கண்ணி குளத்துக்கு வலசை வரும் பறவைகள் கரையில் பழ மரம், பனை மரங்களை நட கோரிக்கை

காங்கேயம்: காங்கேயம் அருகே நொய்யல் ஆற்றின் மூலம் நீர் நிரம்பும் வகையில், 110 ஏக்கர் பரப்பில், 16 அடிக்கு தண்ணீர் தேங்கும் வகையில் கத்தாங்கண்ணி குளம் அமைந்துள்ளது. கடந்த காலங்களில் பொதுப்பணித்துறை சார்பில் குளம் முழுவதும் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றி, கரைகளை பலப்படுத்தி, குளத்துக்கு வெள்ள நீர் திறந்து விடப்பட்டது.
நடப்பாண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால், நொய்யல் ஆற்றின் மூலம் நீர் பெறும் குளம் குட்டைகளுக்கும் நீர்வரத்தானது. இதன்படி கத்தாங்கண்ணி குளத்துக்கு கடந்த வாரம் முதல் நீர் வருகிறது. தற்போது ஐந்து அடிக்கு தண்ணீர் உள்ளது.

அதேசமயம் குளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டதால், குளம் சுத்தமாகவும், கரைகளில் எவ்வித மரங்களும் இல்லாமல், மொட்டையாக காட்சியளிக்கிறது.
குளத்தின் உட்பகுதியில் பழமையான கருவேல மரங்களில் தற்போது, ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் கூடு கட்டி வசிக்கின்றன. குளத்தில் கிடைக்கும் பாசி, நத்தை, மீன் உள்ளிட்ட இரையை உண்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
தற்போதைய நிலையில் பெலிக்கன் பட்டத்தலை வாத்து, புல்புல்தாரா, நீர்க்காகம், சேன்ட் பைபர் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பறவைகள் வசிக்கின்றன. அதேசமயம் குளக்கரையில் பனை, நாவல், புங்கன், வேம்பு உள்ளிட்ட மரங்களை நடவு செய்தால், கரை பலப்படுவதோடு, பறவைகளும் தங்கி இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக அமையும். வெளிநாட்டு பறவைகளும் சீசன் சமயத்தில் குளத்துக்கு வந்து செல்வதால், பழ வகை மரங்களை நட வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மரங்கள் இல்லாததால் கரைப்பகுதியில் ஒரு சில இடங்களில் மண் சரிந்து வருகிறது.
கரையின் உட்பகுதியில் பனைமரங்களும், கரை வெளிப்புறத்தில் பறவைகளுக்கான பழ மரங்களும் நட்டால், பல்லுயிர் பெருக்கத்துக்கு இந்த குளம் பாதுகாப்பானதாக அமையும். 15 ஆண்டுகளுக்கு பின் நொய்யல் ஆற்று நீர் மூன்றாவது முறையாக குளத்துக்கு வருகிறது.
குளத்தை சுற்றிலும் பாதுகாப்பான சூழல் இருப்பதால், மரங்களை நட்டு வைத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement