Advertisement

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

பி.எஸ்.டி.பி.,யை அரசே
நடத்த வலியுறுத்தி மனு

'விதிமீறி இயங்கியதால் பெருந்துறை சிப்காட்டில் மூடப்பட்டுள்ள, தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, அரசு அல்லது சிப்காட் நிர்வாகம் கையகப்படுத்தி, புதுப்பித்து செயல்படுத்த வேண்டும்' என்று கூறி, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில், ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜாவிடம், நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

15 டன் அரிசி அனுப்பி வைப்பு
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் புயலால் பலத்த மழை சேதம் ஏற்பட்டுள்ளது. அரசு நிவாரண முகாம்களில் நுாற்றுக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடு மற்றும் உடமைகளை பலர் இழந்துள்ளனர். அம்மக்களுக்கு உதவும்படி முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி ஈரோடு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில், சென்னை பகுதி மக்களுக்காக மாநில துணை செயலாளர் பிரகாஷ், 15 டன் அரிசியை, சென்னை அன்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ரயில்வே ஸ்டேஷனில்பலத்த பாதுகாப்பு
பாபர் மசூதி இடிப்பு தினமான டிச., 6க்காக, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்துக்கு வரும் மக்கள், பயணிகளையும், உடமைகளையும் சோதனையிட்டு உள்ளே செல்ல அனுமதித்தனர். ஈரோடு வழியாக வந்து செல்லும் ரயில்களில் ஏறி, பயணிகளையும் கண்காணித்தனர். தவிர, காவிரி ஆற்றுப்பாலம், ரயில்வே தண்டவாளங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதுபோல பஸ் ஸ்டாண்ட், மக்கள் நடமாடும் இடங்களிலும் லோக்கல் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சித்த மருத்துவர் வீட்டில்நகை, பணம் திருட்டு
அந்தியூர், சீப்பர் காலனியை சேர்ந்தவர் மணிவண்ணன், 65; ஓய்வு பெற்ற சித்த மருத்துவர். இதே பகுதியில் குடும்பத்தினருடன் வசிக்கிறார். ஒரு வாரத்துக்கு முன் கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினார். வீட்டினுள் பொருட்கள் கலைந்து கிடந்தன.
இரண்டு லட்சம் ரூபாய், 20 பவுன் நகை திருட்டு போனது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். புகாரின்படி அந்தியூர் போலீசார், களவாணிகளை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மணிவண்ணன் வீட்டு சாவியை வைக்கும் இடத்தை நன்கு அறிந்து, ஊருக்கு சென்ற நிலையில், நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

பாசன சபைகளுக்குதேர்தல்; கலெக்டரிடம் மனுதமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு தலைமையிலான விவசாயிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில், 44 பாசன சபைகள் உள்ளன. இவற்றில் விவசாயிகள் பங்களிப்புடன் இதுவரை முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனால் அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியாத நிலையும், சரியான நீர் நிர்வாகத்தை மேற்கொள்ள முடியாமலும் பிரச்னை நிலவுகிறது. எனவே, 44 பாசன சபைகளுக்கும் உண்மையான விவசாயிகளை உறுப்பினராக்கி, முறையான தேர்தலை நடத்தி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். இதற்குரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

வேளாளர் மருந்தியல் கல்லுாரியில்
தேசிய கருத்தரங்கு
திண்டல், வேளாளர் மருந்தியல் கல்லுாரி, மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.
'தடுப்பூசி பற்றிய வதந்திகளை தகர்த்தல் மற்றும் தற்போதைய தடுப்பூசிகளின் பாதுகாப்பை அதிகரிப்பது' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்குக்கு, வேளாளர் அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார், செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் சரவணகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக புதுச்சேரி கவிமணி, டாக்டர் பன்னீர், பெங்களூரை சேர்ந்த டாக்டர் அஜய் கலஞ்சனா மொன்னப்பா, குன்னுார் டாக்டர் சிவானந்தப்பா பேசினர்.
தமிழகத்தின் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து, 700க்கும் மேற்பட்ட மாணவ--மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவில் கல்லுாரி துணை முதல்வர் பார்த்திபன் நன்றி கூறினார்.

'20 மனுக்களுக்கு தீர்வு'
ஈரோட்டில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில், ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. இதன்படி நேற்று நடந்த கூட்டத்துக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன் தலைமை வகித்தார். 'நடப்பாண்டில் இதுவரை நடந்த குறைதீர் கூட்டத்தில், 20 மனுக்கள் நேரிலும், ஆன்லைனிலும் பதிவாகி உள்ளது. அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து தீர்வு கண்டுள்ளோம்.
அதுபோல் கலெக்டர் தலைமையில் திங்கள்கிழமைகளில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம், அமைச்சர்கள் மற்றும் முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட மனுக்களும் எங்களுக்கு வரும். அவற்றையும், 15 நாட்களுக்குள் விசாரித்து தீர்வு கண்டு, பதில் மற்றும் நடவடிக்கை எடுத்துள்ளோம்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலக்கிய திறனறிவு தேர்வில்
பாரதி மெட்ரிக் பள்ளி அபாரம்
மாநில அளவில் நடந்த, தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வில், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் பிளஸ் ௧ மாணவர்கள் ராகுல், சபரீஸ்வரன் தலா, ௯௮ மதிப்பெண்; விசாலினி, சந்தியா தலா, ௯௭ மதிப்பெண்; மாணவன் தருண், 92 மதிப்பெண் பெற்று, சிறப்பிடம் பெற்றனர். இவர்களுக்கு மாதந்தோறும், 1,500 ரூபாய், இரண்டு ஆண்டுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் மோகனாம்பாள், தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.

மின் பயனீட்டாளர்
குறைதீர் கூட்டம்
ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில், இன்று காலை, 11:00 மணிக்கு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், ஈரோடு, இ.வி.என்., சாலையில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. இதில் ஈரோடு மாநகர், கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன் சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி பகுதி பயனீட்டாளர்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.

காங்கேயத்தில் இன்றுமின் குறைதீர் கூட்டம்
காங்கேயம் கோட்ட மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் நாள் கூட்டம், மாதத்தின் முதலாவது புதன்கிழமை நடக்கிறது. இதன்படி இம்மாத கூட்டம் இன்று, காங்கேயத்தில் சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணிவரை நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்கிறார். குறைகளை தெரிவித்து தீர்வு பெற, மின் வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் கணேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

கவுந்தப்பாடியில் 9ல்நாட்டு சர்க்கரை ஏலம்
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வரும், 9ல் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்கிறது. அன்று காலை, 11:00 மணிக்குள் நாட்டு சர்க்கரை மூட்டைகளை கொண்டு வர வேண்டும். மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி, கலப்படமின்றி, தரமாக ஏலத்துக்கு கொண்டு வர, விற்பனைக்குழு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரூ.36.44 லட்சத்துக்குகொப்பரை விற்பனை
ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நடந்தது. மொத்தம், 1,001 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 79.36 ரூபாய் முதல், 87.40 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 6௧ ரூபாய் முதல், 79.86 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 46,978 கிலோ கொப்பரை தேங்காய், 36.44 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.

ஆசிரியரிடம் ரூ.3.50 லட்சம்
மோசடி செய்த 3 பேர் கைது
கரூர், தான்தோன்றிமலை, பாரதியார் நகரை சேர்ந்தவர் பரமசிவம், 53, அரசுப்பள்ளி ஆசிரியர். தனது நண்பர் மூலம் வெள்ளகோவிலை சேர்ந்தவரிடம், பணத்தை இரட்டிப்பு செய்வது தெரிந்து கொண்டார். இதற்காக நேற்று முன்தினம், 3.50 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, வெள்ளகோவில் கடைவீதிக்கு வந்தார். அப்போது வந்த மூன்று பேர், பணத்தை பெற்றுக் கொண்டு, அவரிடம் ஒரு பேக்கை கொடுத்து சென்றனர்.
அந்த பேக்கை பார்த்தபோது, ரூபாய் நோட்டுக்குப் பதில், காகித பேப்பர் வைத்து மோசடி செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில், உடனடியாக புகார் செய்தார். வெள்ளகோவில் போலீசார் அப்பகுதி
'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் வெள்ளகோவில், லக்குமநாயக்கன்பட்டி ரமேஷ், 44; ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் சாமிநாதன், 63; கோவை, மதுக்கரை ஆனந்தராஜ், 53, என்பது தெரிந்தது.
முத்துார் பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் கைது செய்து பணத்தை மீட்டனர். மூவரையும் காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

ஜெயலலிதா நினைவு நாள்
பெருந்துறையில் அஞ்சலி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஏழாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., சார்பில், தொகுதியில் பல்வேறு இடங்களில் அவருடைய உருவப்படத்துக்கு, கட்சியினர், மலர் துாவி மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ., ஜெயகுமார் தலைமை வகித்தார். பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள் ஜோதி செல்வராஜ், விஜயன், ரஞ்சித்ராஜ் முன்னிலை வகித்தனர்.
பெருந்துறை எம்.எல்.ஏ. அலுவலகத்தில், மரியாதை செலுத்திய பின், நகரின் முக்கிய வீதிகள் வழியாக மவுன ஊர்வலமாக சென்று, குன்னத்துார் நால் ரோடு சந்திப்பில், ஜெயலலிதா போட்டோவுக்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செய்தனர்.
இதில் பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், துணை சேர்மன் உமா மகேஸ்வரன், நகர செயலாளர்கள் பழனிச்சாமி, கல்யாணசுந்தரம், சிவசுப்பிரமணியம், ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, பெருந்துறை டவுன் பஞ்., வார்டு கவுன்சிலர்கள் அருணாசலம், மலர்விழி செல்வராஜ், துடுப்பதி பஞ்., தலைவர் கவிதா, போலநாயக்கன்பாளையம் பஞ்., தலைவர் சரஸ்வதி சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை பணியாளர்
போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர், கோட்டத் தலைவர் வெங்கிடுசாமி தலைமையில், தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், கண்டன முழக்க போராட்டத்தில், நேற்று ஈடுபட்டனர்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சங்க நிர்வாகிகள் தங்கவேல், சிவக்குமார், தில்லையப்பன் பங்கேற்றனர்.
ஓய்வூதியர் சங்கமம்
ஓய்வூதியர் சார்பில், தாராபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன், நேற்று காலை ஓய்வூதியர் சங்கம நிகழ்ச்சி நடந்தது.
இதில் பல்வேறு சங்க ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். ஒப்பந்த பலன் மற்றும் டி.ஏ. உயர்வு வழங்குதல், வாரிசுகளுக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement